Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: சண்டிவீரன் – அழகான கிராமத்துக் கதை – தேவையான கருத்து!

திரைவிமர்சனம்: சண்டிவீரன் – அழகான கிராமத்துக் கதை – தேவையான கருத்து!

1147
0
SHARE
Ad

Chandi-Veeran-Movie-Poster-6கோலாலம்பூர், ஆகஸ்ட் 7 – ‘மூன்றாம் உலகப் போர் என்று ஒன்று வந்தால் அது தண்ணீருக்காகத் தான் இருக்கும்’ சண்டிவீரன் படத்தின் முடிவில் சொல்லப்பட்ட கருத்து. இந்த கருத்தை மையமாக வைத்துப் பின்னப்பட்ட கதையில் காதல், இரண்டு ஊர்களின் பகை, மனிதர்களின் பிடிவாதம் போன்றவற்றை அச்சு அசல் அதே கிராமத்து சாயலில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சற்குணம்.

‘நய்யாண்டி’ கொடுத்த அடியில் இருந்து மீண்டு, ஒருவழியாகத் தனது பழைய பாணிக்கே திரும்பியிருக்கிறார்.

அதேபோல், ‘இரும்புக் குதிரை’ எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாததால், அடுத்ததாக ஒரு வெற்றியைக் கொடுத்தே தீர வேண்டும் என்று ஜிம்மிலேயே கதியாய் கிடந்த அதர்வா முரளிக்கு, இயக்குநர் பாலா மூலமாக கிடைத்தது இந்த அற்புதமான வாய்ப்பு. அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். படத்தை இயக்குநர் பாலா தனது பி ஸ்டூடியோஸ் மூலமாகத் தயாரித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

‘கயல்’ படத்திற்குப் பிறகு இளைஞர்களின் கனவுக் கன்னியாகிவிட்ட ஆனந்திக்கு, இது ஒரு நல்ல வாய்ப்பு தான் என்றாலும், கயலை ஒப்பிடும் போது கதையில் அவருக்கான இடம் சற்று குறைவு தான்.

கதைச் சுருக்கம்

தஞ்சாவூர் அருகே இரண்டு சிறிய கிராமங்கள். இரு கிராமங்களுக்கு இடையே தண்ணீர் பிரச்சனையால் பல வருடங்களாகப் பகை. காரணம் இரு கிராமங்களையும் இணைக்கிறது ஒரு குளம். அந்த ஊரில் அதிக செல்வாக்கு மிக்கவர் மில்லுக்காரர். ஒவ்வொரு முறையும் ஏலத்தில் அந்தக் குளத்தை குத்தகைக்கு எடுத்துக் கொண்டு பக்கத்து கிராமத்திற்கு தண்ணீர் தர மறுக்கிறார்.

இந்தப் பகையால் உருவான கலவரத்தில், சிறிய வயதிலேயே தன் தந்தையை இழந்து விட்ட அதர்வா, வளர்ந்த பின்னர் அந்தப் பிரச்சனையைத் தீர்க்க வேண்டிய ஒரு சந்தர்ப்ப சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்.

குடும்ப வறுமை, மில்லுக்காரரின் மகளுடன் (ஆனந்தி) காதல் , பக்கத்து கிராமத்தில் தண்ணீர் பிரச்சனையால் வாடும் நண்பர்களின் குடும்பம் இந்த நெருக்கடியான சூழ்நிலையில் அதர்வா எடுக்கும் முடிவுகளும், அதனால் ஏற்படும் விளைவுகளும் தான் படத்தின் சுவாரஸ்யங்கள்.

நடிப்பு

B9zoXbwIIAAfYzR

என்ன தான் உடம்பை ஏற்றி முஷ்டி முறுக்கினாலும், அதர்வா நடிப்பில் எப்போதும் ஒரு குழந்தைத் தனம் அப்பட்டமாக வெளிப்படும். அது அந்தக் கதாப்பாத்திரத்தின் தன்மையைக் கெடுப்பதற்குக் காரணமாக இருந்து வந்தது. ஆனால் இந்தப் படத்தில் அந்தப் பிரச்சனை இல்லை. அதர்வாவின் கதாப்பாத்திரமே அப்படி தான் அமைந்துள்ளது. ஒரு கிராமவாசியாக படம் முழுவதும் கலகலப்பாகவும், அப்பாவியாகவும் வலம் வருகிறார்.

மலாய் மொழில் பேசுவதாகக் கூறி “அக்கு அக்கு சிந்தாவா” என்று பழைய பாடலைப் பாடி கிராமத்துக்காரர்களை ஏமாற்றுவது, ஆனந்தியை விரட்டி விரட்டி காதல் வலையில் விழ வைப்பது என படத்தில் முதல் பாதி முழுவதும் கலகலப்பு சேர்க்கும் அதர்வா, இரண்டாம் பாதியில் ஏலத்தில் மில்லுக்காரருடனான போட்டி, பக்கத்து கிராமத்து மீதான கரிசனம், கலவரத்தை தடுக்க எடுக்கும் அதிரடி முடிவுகள் என கதாப்பாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ப சிறப்பாக நடித்திருக்கிறார்.

ஆனந்தி… பார்த்தவுடனே அள்ளிக் கொஞ்சும் குழந்தை முகம். “அப்பா யாரோ ஒரு பையன் எனக்கு மெசேஜ் அனுப்பிக்கிட்டே இருக்காம்பா” என்று அப்பாவிடம் அப்பாவியாகக் கூறுவதும், “ரோத்தான் அடி வாங்குனா புள்ளப் பொறக்காதாமே?” என்று அதர்வாவிடம் வம்பிழுப்பதுமாக, ஸ்கூல் பெண் கதாப்பாத்திரத்தில் குழந்தைத்தனமாகவே நடித்திருக்கிறார். நடிப்பை வெளிப்படுத்த அழுத்தமான காட்சிகள் இல்லை என்பது தான் குறை. மற்றபடி க்ளோசப் காட்சிகளில் ஆனந்தி எப்போதும் போல் ரசிக்க வைக்கிறார்.

அடுத்ததாக, மில்லுக்காரராக மலையாள நடிகர் லால் நடித்திருக்கிறார். தொடக்கத்தில் இருந்து முடிவு வரை லால் வரும் காட்சிகள் ஒவ்வொன்றும் மிரட்டும் வகையில் அவ்வளவு சிறப்பாக அமைந்துள்ளது. படத்தின் கிளைமாக்சில் அவரது கதாப்பாத்திரம் சற்றே காமெடி ஆக்கப்பட்டாலும் கூட கதைக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று சொல்லலாம். நம்மால் ஏற்றுக் கொள்ள முடிகின்றது.

ஒளிப்பதிவு மற்றும் இசை

பிஜி முத்தையா ஒளிப்பதிவில் கிராமத்துக் காட்சிகள் அழகு. குறிப்பாக கூகுள் எர்த்தைப் பார்ப்பது போன்ற ஒரு உணர்வைத் தரும் அந்த ‘டாப் ஆங்கிள் வியூ’ அவ்வளவு அழகு. கதைப்படி அடிக்கடி அந்தக் குளத்தை காட்ட வேண்டிய சூழ்நிலையில் ஒவ்வொரு முறையும், அதை வெவ்வேறு கோணங்களில் காட்டி படம் பார்ப்பவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தாமல் ஒளிப்பதிவு செய்திருப்பது அருமை.

அதே போல், சபேஷ்  – முரளி இசையில் பாடல்கள் அனைத்தும் அந்த வட்டார வழக்கின் சொல்லாடல்களுடன், கிராமியத்தைத் தழுவி வந்திருப்பது வரவேற்கத்தக்கது. அது சற்குணம் படத்தின் தனித்துவம் என்றும் சொல்லலாம். (நய்யாண்டியைத் தவிர)

திரைக்கதை

Chandi-Veeran-Video-Song

ஒரு கிராமத்தின் வீண் பிடிவாதத்தால் இன்னொரு கிராமத்தில் தண்ணீருக்காக மக்கள் படும் அவதியையும், அதனால் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்பையும் விறுவிறுப்பான திரைக்கதையின் மூலம் மிகச் சிறப்பாக விளக்கியுள்ளார் இயக்குநர். படம் பார்க்கும் நமக்கு அது படம் என்பதையும் மீறி தண்ணீர் தராத கிராமத்தின் மேல் ஆத்திரமும், அவதிப்படும் மக்கள் மீது பரிதாபமும் மேலோங்குகிறது.

வெட்டுக்குத்து இரத்தம் சதை என எதுவும் இல்லாமல் சுமூகமாகக் கொண்டு சென்று, “கர்நாடகா தண்ணீர் குடுக்கலங்கம்போது நமக்கு எப்படி கோவம் வருது. அது மாதிரித்தான அவிங்களுக்கும்” என்று கிராமவாசிகளை உணர வைத்த போது நமக்கும் அப்பாடா என்று தோன்றுகிறது.

ஆனால், சிங்கப்பூரில் ஓவர் ஸ்டேயில் இருந்த குற்றத்திற்காக ரோத்தான் அடி வாங்கும் அதர்வா, போலி பாஸ்போர்ட் மூலமாக ஊருக்கு வருவதாகப் படத்தில் வைக்கப்பட்ட காட்சிகள் கதைக்குத் தேவையில்லாத ஒன்றாகத் தான் தோன்றுகின்றது.

“சிங்கப்பூரில சீனாக்காரனையே தூக்கிப் போட்டு மிதிச்சவன் நான்” என்று விருமாண்டி படத்தில் கமல் கூறுவார்.

அதன் தாக்கமோ என்னவோ இந்தப் படத்தில், அதர்வா சிங்கப்பூரில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலம் ஊருக்கு வந்ததை பெரிய சாதனையாகக் கருதி அந்தக் கிராமமே “ஏப்பு செட்டிங் பாஸ்போர்ட்டுல வந்தியாம்ல?” “ஏப்பு ரோத்தான குதிர மூத்திரத்துல ஊறப்போட்டு அடிப்பாகளாம்ல?” என்று ஆச்சர்யப்பட்டு கேட்கிறது.

அந்தக் காட்சிகளால் கதாப்பாத்திரத்தின் தன்மைக்கோ அல்லது கதைக்கோ எந்த ஒரு தொடர்பும் இல்லாத போது எதற்காக அந்தக் காட்சிகள் வைக்கப்பட்டன என்பதை இயக்குநரிடம் தான் கேட்க வேண்டும். அந்தக் காட்சிகளால் வீணாக இன்று சிங்கப்பூரில் படம் வெளியிடத் தடைபட்டது தான் மிச்சம்.

மற்றப்படி, முழுக்க முழுக்க கிராமிய சூழலில் அமைந்து நல்ல கருத்தைச் சொல்லும் இந்தப் படம் அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டிய ஒன்று.

– ஃபீனிக்ஸ்தாசன்