மூவார், ஆகஸ்ட் 8 – அம்னோ துணைத் தலைவர் பதவியிலிருந்து தாம் விலகப் போவதில்லை என முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் உறுதிபடத் தெரிவித்துள்ளார். கட்சி மற்றும் நாட்டின் மீதான நன்மதிப்பைக் கெடுக்கும் வகையில் தாம் செயல்பட்டதால் பதவி விலக வேண்டும் என கூறுவது அர்த்தமற்ற ஒன்று என்று அவர் கூறியுள்ளார்.
“நிச்சயமாக துணைத் தலைவர் பதவியில் இருந்து நான் விலகப் போவதில்லை. ஏனெனில் கட்சி தொடர்பாக நான் எந்தத் தவறும் செய்யவில்லை. நாட்டுக்கு எந்த அச்சுறுத்தலும் என்னால் ஏற்படவில்லை என்பதுடன், கட்சியின் அரசியல் சாசனத்திற்கு எதிராகவும் நான் ஏதும் சொன்னதில்லை. அப்படி செய்ததாகக் கூறினால், அதற்குரிய ஆதாரங்களைக் காண்பிக்க வேண்டும்.” என்று பாகோ அம்னோ தொகுதி நிகழ்ச்சி ஒன்றில கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் மொகிதின் கூறினார்.
இறைவன் என்ன திட்டம் வைத்திருக்கிறாரோ அதை தாம் ஏற்றுக் கொண்டதாகக் குறிப்பிட்ட அவர், அரசுக்கும் மக்களுக்கும் தம்மால் இயன்றதைச் செய்திருப்பதாகக் கூறினார்.
“1எம்டிபி குறித்து விசாரிக்கும் அரசு அமைப்புகளுக்கு எந்தவித தொந்தரவுகளையும் அளிக்கக் கூடாது என அனைத்துத் தரப்பையும் கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும். அப்போதுதான் உண்மை வெளிவரும்” என்று மொகிதின் மேலும் தெரிவித்தார்.