புதுடில்லி,ஆகஸ்ட் 11- தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் சிபிஐ-யிடம் மூன்று நாட்களுக்குள் சரணடைய வேண்டும் என உயர்நீதிமன்றம் கெடு விதித்திருப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தயாநிதி மாறன் இன்று மனுத் தாக்கல் செய்துள்ளார்.
மத்தியத் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராகத் தயாநிதி மாறன் பதவி வகித்த காலத்தில், தமது வீட்டில் 300க்கும் மேற்பட்ட இணைப்புகளைச் சட்டவிரோதமாக இணைத்துத் தமது சகோதரர் கலாநிதி மாறனின் சன் குழுமத் தொலைக்காட்சியின் அலுவல்களுக்குப் பயன்படுத்தினார் எனக் குற்றச்சாட்டு எழுந்தது.இது தொடர்பாகச் சிபிஐ அவர்மீது உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இவ்வழக்கில் கைதாகாமல் இருப்பதற்காகத் தயாநிதிமாறன் முன் பிணை பெற்றார்.ஆனால், இவ்வழக்கு விசாரணைக்குத் தயாநிதி மாறன் ஒத்துழைப்பு அளிப்பதில்லை எனக் கூறி சிபிஐ அவரது முன் பிணையை ரத்து செய்யுமாறு உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வைத்தியநாதன் தயாநிதி மாறனுக்கு வழங்கப்பட்ட முன் பிணையை ரத்து செய்ததோடு, 3 நாட்களுக்குள் தயாநிதி மாறன் சிபிஐ-யிடம் சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து உடனடியாக உச்சநீதிமன்றத்தில் தயாநிதி மாறன் இன்று மனுத் தாக்கல் செய்துள்ளார்.
நீதிபதி டி.எஸ்.தாகூர் தலைமையிலான பெஞ்ச் முன்பாகத் தயாநிதி மாறன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, இந்த வழக்கில் ஏற்கெனவே கடந்த 2013 மற்றும் 2014-ஆம் ஆண்டுகளில் மாறனிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டுள்ளது. எனவே, தயாநிதி மாறனின் இடைக்கால முன் பிணை ரத்துக்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
உடனே, இந்த மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி தெரிவித்தார்.