புதுடெல்லி, ஆகஸ்ட் 11- இந்தியாவில் உள்ள மக்கள் ஒவ்வொருவருக்கும் ஒரே அடையாள அட்டை வழங்கும் வகையில் ஆதார் அட்டைத் திட்டத்தை மத்திய அரசு நடைமுறைக்குக் கொண்டு வந்து, மக்களுக்கு ஆதார் அட்டை வழங்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்தியக் குடிமகன் என்பதற்கு அடையாளமாகக் குடும்ப அட்டை (ration card) எவ்வளவு முக்கியமோ, அதேபோல் ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் ஆதார் அட்டை அவசியம் என மத்திய அரசு வலியுறுத்தியது.
ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற முடியும் என மத்திய அரசு உத்தரவிட்டது.
மத்திய அரசின் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இன்று இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அரசின் நல திட்டங்களைப் பெற ஆதார் எண் கட்டாயம் இல்லை என்று உத்தரவு பிறப்பித்தனர்.
மேலும், ஆதார் எண் கட்டாயம் அல்ல என்ற தகவலை மக்களுக்கு ஊடகங்கள் மூலம் தெரியப்படுத்தவேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
பொது விநியோகம், சிலிண்டர் வழங்குவதற்கு ஆதார் எண்ணை அரசு கேட்கலாம். ஆதாருக்காகத் தகவல்களைப் பெறும் UDAI பிற அமைப்புகளிடம் விவரங்களைப் பகிரக் கூடாது” என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.