கொழும்பு, ஆகஸ்ட் 13- இலங்கை அதிபர் சிறிசேனா மீது தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும் , தேர்தல் வெற்றிக்குப் பின்னர் அவர் தன்னை இலங்கையின் பிரதமராக நியமிப்பார் என்றும் ராஜபக்சே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ரிவி தெரணவில் இடம்பெற்ற ‘360’ விசேட அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் பேசியதாவது:
“ஜனவரி 9-ஆம் தேதி அதிகாலை நான் அதிபர் மாளிகையிலிருந்து வெளியேறியது மீண்டும் அரசியலுக்கு வருவதற்காக அல்ல.ஆனாலும் மக்களின் வேண்டுகோளைப் புறக்கணிக்க முடியாத நிலையில்தான் மீண்டும் அரசியலுக்குப் பிரவேசித்துள்ளேன்.
அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் விசேட உரையின் மூலமாகக் கூறப்பட்ட கருத்துக்கள் குறித்துத் தான் எந்தவித வருத்தமும் அடையவில்லை. அது கட்சியின் வாக்குபலத்தை அதிகரிக்குமே தவிர, எந்தவிதத்திலும் வீழ்ச்சிக்குக் காரணமாகாது.
அதேபோல், கூட்டமைப்பு வெற்றிபெற்றால் பிரதமர் பதவியைச் சிறிசேனா,எனக்கு வழங்க மாட்டார் என்று மற்றவர்கள் கூறுவதைப் பற்றியும் எனக்குக் கவலை இல்லை.1970- ஆம் ஆண்டு முதல் மைத்திரிபால சிறிசேனாவை நான் அறிவேன். அவர் பிரதமர் பதவியை எனக்கு வழங்காமல் இருக்கமாட்டார்” என்று நம்பிக்கையுடன் பேசினார் ராஜபக்சே.