கோலாலம்பூர், ஆகஸ்ட் 13 – முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டின் 22 ஆண்டு கால தலைமைத்துவத்தில் ஏற்பட்ட “தோல்விகள்” பற்றி விளக்கமளிக்கும் புத்தகம் ஒன்று இன்று பிற்பகல் வெளியிடப்படவுள்ளது.
பாக் ஹபீப் என பலராலும் அறியப்படும் நாட்டின் மூத்த எழுத்தாளரான சையத் ஹூசைன் அல் அட்டாஸ் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார்.
கடந்த 1981 முதல் 2003-ம் ஆண்டு வரையிலான மகாதீரின் தலைமைத்துவத்தில், ஏற்பட்ட சம்பவங்களை விளக்கமாக அந்தப் புத்தகத்தில் தான் பதிவு செய்துள்ளதாக பாக் ஹபீப் தெரிவித்துள்ளார்.
மேலும், “இது தான் என்னுடை வேலை. ஒரு எழுத்தாளராக, என்ன நடந்தது என்பதை நாம் ஆவணப்படுத்த வேண்டும். 22 ஆண்டுகளாக மகாதீர் பிரதமராகப் பதவி வகித்தார். ஆனால் அவர் தோல்வியடைந்துவிட்டார். தற்போது திடீரென தூக்கத்தில் பேசுபவர் போல், (mengigau) பேசுகின்றார். ஒருவேளை அவரது வயது மூப்பு காரணமாகவும் இருக்கலாம்” என்றும் பாக் ஹபீப் கூறியுள்ளார்.
எனினும், நடப்பு பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை, மகாதீர் கடுமையாக விமர்சித்து வருவதால், நஜிப்புக்கு ஆதரவாகத் தான் இந்தப் புத்தகத்தை எழுதவில்லை என்றும் பாக் ஹபீப் குறிப்பிட்டுள்ளார்.
பிற்பகல் 3 மணியளவில் இந்த புத்தக வெளியீட்டு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், தற்போது அந்த விழா தொடங்கப்பட்டிருக்கும் என நம்பப்படுகின்றது.