புதுடில்லி, ஆகஸ்ட் 14- தேர்தல் விதிமுறைகளை மீறி 4 தொகுதிகளில் போட்டியிட்டதாக ஜெயலலிதா மீது தொடரப்பட்ட வழக்கில் வரும் செப்டம்பர் 8-ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒரே சமயத்தில் இரண்டு தொகுதியில் வேண்டுமானால் போட்டியிடலாம்.ஆனால், ஒரே சமயத்தில் இரண்டிற்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடக் கூடாது என்பது தேர்தல் சட்ட விதி.
ஆனால், ஜெயலலிதா இந்தச் சட்ட விதிகளை மீறி கடந்த 2001-ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி, புவனகிரி, ஆண்டிப்பட்டி, புதுக்கோட்டை ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.
ஆனால் டான்சி முறைகேடு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
ஒருவருக்கு 2 ஆண்டுக்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாலும் 2 தொகுதிகளுக்கு மேல் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாலும் ஜெயலலிதாவின் மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால் அவர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது.
இருப்பினும் முதல்வராகப் பதவியேற்று, ஊழல் வழக்கில் நீதிமன்றத்தின் உத்தரவால், சில மாதங்களில் முதல்வர் பதவியிலிருந்து விலகி,ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வராக நியமித்து,பின்பு நீதிமன்றம் வரை ஊழல் வழக்கிலிருந்து விடுவித்ததால், 2002ஆம் ஆண்டு ஆண்டிபட்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்று மீண்டும் முதலமைச்சராலப் பதவியேற்றார் ஜெயலலிதா.
இந்நிலையில், 4 தொகுதியில் போட்டியிட முயன்ற ஜெயலலிதா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குப்புசாமி வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கு விசாரணை நடப்பில் இருக்கும் போது குப்புசாமி திடீரென இறந்து போனதால், ஏ.கே.எஸ்.விஜயன் மனுதாரராக இருந்து வழக்கை நடத்தி வருகிறார்.
4 தொகுதிகளில் ஜெயலலிதா போட்டியிட்ட வழக்கை விரைந்து விசாரித்துத் தீர்ப்பளிக்க வேண்டும் எனவும், நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக 2 முறை பதவி இழந்தவர் ஜெயலலிதா என்பதைக் கருத்தில் கொண்டு தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் ஏ.கே.எஸ்.விஜயன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அந்தி அர்ஜுனா கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் ,இந்த வழக்கின் இறுதி விசாரணை வரும் செப்டம்பர் 8ம் தேதி நடைபெறும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு அறிவித்துள்ளது.