பெய்ஜிங், ஆகஸ்ட் 17 – சீனாவில் தியான்ஜின் நகரின், இரசாயனக் கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 721 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தீ விபத்தில் சிக்கி இதுவரை 95-க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகி இருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன. இதன் காரணமாக பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே இந்த தீவிபத்தில் மாயமானவர்களில் தீயணைப்புப் படைவீரர்களும் இருப்பதால், அவர்கள் பற்றிய விவரங்களை வெளியிட வேண்டும் என அவர்களுடைய குடும்பத்தினர் தியான்ஜினில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆயிரக்கணக்கான வீரர்கள் மீட்புப் பணியிலும், தீயை அணைக்கும் பணியிலும் ஈடுபட்டு இருந்தாலும், வெடித்துச் சிதறியது இரசாயனப் பொருட்களின் சேமிப்புக் கிடங்கு என்பதால் அவற்றை தண்ணீர் ஊற்றி அணைப்பது அவ்வளவு எளிதானதாக இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.