கொழும்பு, ஆகஸ்ட்17- 225 இடங்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
225 இடங்களில் 196 உறுப்பினர்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவர்.தேசிய அளவில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில், 29 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர்.
இத்தேர்தலில் 60 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் 100 சுயேச்சைகள் உள்பட 6,151 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
பல கட்சிகள் போட்டியிட்டாலும், இந்தத் தேர்தலில் சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணிக்கும், பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய நல்லாட்சி முன்னணிக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனா ஆகியவை தனித்துப் போட்டியிடுகின்றன.
நாடு முழுவதும் 12 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
அமைதியான முறையில் தேர்தல் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வன்முறையாளர்களைக் கண்டதும் சுட அந்நாட்டுத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல் கள்ள ஓட்டுப் போட முயற்சிப்பவரைத் தலையில் சுட்டுக்கொல்ல உத்தரவிட்டுள்ளது.
63,000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வாக்குப்பதிவு முடிவுகள் இரண்டு கட்டமாக வெளியிடப்பட உள்ளது. முதல்கட்டமாக இன்று இரவு 11 மணி அளவில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
நாளை தொகுதி வாரியான முடிவுகள் வெளியிடப்படும்.
.