Home உலகம் இலங்கையில் 32 ஆண்டுகட்குப் பின்பு ஒரு தமிழர் எதிர்க்கட்சித் தலைவரானார்!

இலங்கையில் 32 ஆண்டுகட்குப் பின்பு ஒரு தமிழர் எதிர்க்கட்சித் தலைவரானார்!

841
0
SHARE
Ad

tna_samatin (1)கொழும்பு – இலங்கை எட்டாவது நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகச் சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்துள்ளார்.

இலங்கையில் ஆகஸ்டு 17-ஆம் தேதி நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 106 இடங்களில் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கியத் தேசியக் கட்சி வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, ஐக்கியத் தேசியக் கட்சிடன்  அதிபர் சிறிசேனாவின் சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகிய சிங்கள கட்சிகள் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்துள்ளன.

அந்தக் கட்சிகளுக்கு அடுத்த நிலையில் 16 எம்.பி.க்களைக் கொண்ட மூன்றாவது பெரிய கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதான் இயல்பாகவே நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக அமைய வேண்டும்.

#TamilSchoolmychoice

ஆனால், அரசாங்கத்தில் இணையாத ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஒரு பிரிவினர், எதிர்க்கட்சித் தலைவர் பதவி தங்களுக்கே கொடுக்கப்பட வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். இந்தக் கோரிக்கையை இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா நிராகரித்துவிட்டார்.

இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, புதிய உறுப்பினர்கள் கலந்து கொண்ட முதல் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் மூத்த அரசியல் தலைவரான கரு ஜெயசூர்யா நாடாளுமன்ற அவைத் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சபாநாயகரைத் தேர்ந்தெடுத்த பின்பு, எதிர்க்கட்சித் தலைவராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இதைச் சபாநாயகர் கரு ஜெயசூர்யா நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து புதிய அமைச்சரவை நாளை வெள்ளிக்கிழமை பதவியேற்கவிருக்கிறது.

இலங்கையில் 32 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஒரு தமிழருக்குக் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐக்கியத் தேசியக் கட்சியின் அதிபராக ஜே.ஆர். ஜெயவர்த்தனே பதவி வகித்த காலத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் 1977ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 1983ஆம் ஆண்டு அக்டோபர் 24-ஆம் தேதி வரை எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்தார்.

அதன் பின்பு தமிழர்கள் யாரும் தேர்தலில் வென்று எதிர்க்கட்சித் தலைவராகக் கூட வர முடியவில்லை.

ஏறக்குறைய 32 ஆண்டுகளுக்குப் பின் இப்போது தான் இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராகி இருக்கிறார் என்பது வரவேற்கத் தகுந்த ஒரு மாற்றமாகும்.