கொழும்பு, ஆகஸ்ட் 17- இலங்கையில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது.
தேர்தலை முன்னிட்டுப் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. வன்முறையாளர்களைச் சுட்டுக் கொல்லத் தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
அதனால்தானோ என்னவோ எதிர்பார்த்த வன்முறைகள் ஏதும் நடக்கவில்லை.
வாக்காளர்கள், அதுவும் இளைய சமுதாயத்தினர் ஆரவாரமின்றி அதே சமயம் ஆர்வத்தோடு வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
இம்முறை தாம் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் வாக்களித்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இத்தேர்தலை முன்னிட்டு வெளியூரிலிருந்து வாக்குச்சாவடிகளுக்கு வருவதற்கும், ஊருக்குத் திரும்பிச் செல்வதற்கும் வாக்காளர்களுக்கு வசதிக்காகச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தலைநகர் கொழும்பு மற்றும் கூட்ட நெரிசல் மிக்க பகுதிகளிலிருந்து இந்தச் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
18-ஆம் தேதி வரையில் இந்தச் சிறப்புப் பேருந்துகள் சேவைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேர்தலில் வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக இலங்கையின் புகழ்பெற்ற அளுத்கம கந்தே புத்த விகாரத்தில் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா மற்றும் முன்னாள் அதிபரான ராஜபக்சே இருவரும் தனித்தனியாக வழிபாடு நடத்தியுள்ளனர்.