கொத்தா கினபாலு, மார்ச் 11 – நாட்டின் பொதுத்தேர்தல் தள்ளிப் போவது தொடர்பாக சபா முற்போக்கு கட்சியின் தலைவர் யோங் தெக் லீ வெளியிட்டுள்ள அறிக்கையில், லகாட் டத்து விவகாரத்தின் காரணமாகத் தேர்தலை ஒத்தி வைப்பது சரியான முறையல்ல என்றும், விரைவில் நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தல் தேதியை அறிவிக்குமாறும் தேசிய முன்னணி அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் அவரது அறிக்கையில், ஆளும் கட்சியின் ஆட்சிக்காலம் மார்ச் 8 ஆம் தேதியுடன் நிறைவடைந்து விட்டது ஆனால் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாமல் இருப்பது மலேசிய வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
எனவே பிரதமர் நஜிப்போ அல்லது முதல்வர் மூசா அமானோ உடனடியாக தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் அப்படி செய்ய இயலாத பட்சத்தில் அவர்கள் பேரரசரிடம் நாடாளுமன்றத்தைக் கலைப்பது தொடர்பாக அறிவுரை பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தேர்தல் தள்ளிப் போவதற்கு லகாட் டத்து விவகாரத்தை காரணம் காட்டுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை என்றும், நமது காவல்துறையினரும், பாதுகாப்புப் படைகளும் இவ்விவகாரத்தை மிகவும் திறமையாகக் கையாண்டு வருகிறார்கள் என்றும், தீபகற்ப மலேசியாவில், சரவாக் மாநிலத்தில் கம்யுனிஸ்ட் கிளர்ச்சியின் போதும் கூட தேர்தலை வெற்றிகரமாக நமது முன்னோடிகள் நடத்திக்காட்டி இருக்கிறார்கள் என்றும் யோங் டெக் லீ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.