காவல்துறையினரின் கைது நடவடிக்கையில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ள, இளங்கோவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் பிணை கோரி மனுத் தாக்கல் செய்தார். எனினும், இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனைத் தொடர்ந்து அவர், உடனடியாக டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
இந்நிலையில் பிரபல நாளிதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பிரத்யேகப் பேட்டியில், “வழக்கிற்கு பயந்து ஓடி ஒளியும் அளவிற்கு நான் கோழை அல்ல. ஆளுங்கட்சியினருக்கு எதிராக செயல்படும் தலைவர்கள் மீது இப்படிப்பட்ட பொய் புகார்களை வாங்கி அவர்களை கைது செய்வது அதிமுகவின் வழக்கம். என் மீது போடப்பட்ட இந்த வழக்கு ஒருநாள் தூள் தூளாகும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது நீங்கள் எங்கு இருக்குறீர்கள்? என எழுப்பப்பட்ட கேள்விக்கு, பதில் அளிக்க மறுத்துள்ள இளங்கோவன், “தற்போது இந்தியாவில் தான் இருக்கிறேன். சொந்தப்பணிக்காக தமிழகத்தில் இருந்து கொஞ்சம் தூரம் வந்திருக்கிறேன். தமிழகத்திற்கு எப்போது வேண்டுமானாலும் வருவேன்” என்று மட்டும் கூறியுள்ளார்.
தான் இருக்கும் இடத்தினை இரகசியமாக வைத்துள்ள இளங்கோவன், முன் பிணை கிடைத்த பிறகே தமிழகம் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.