பாரிஸ் – பிரான்சில், அதிவேக இரயில் ஒன்றில் 25 வயது மதிக்கத் தக்க மர்ம மனிதன் ஒருவன், அதிநவீன ஆயுதங்களுடன் நுழைந்து பயணிகளை நோக்கி சுட இருந்த சமயத்தில், பிரான்சிற்கு சுற்றுலா வந்திருந்த அமெரிக்கர்கள் மூவர், அந்த மர்ம மனிதனை அதிரடியாகத் தாக்கி மக்களை காப்பாற்றிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை, ஆம்ஸ்டர்டாம்-பாரிஸ் அதிவேக ரயிலில், 500-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்த ஒரு பெட்டியில் திடீரென மர்ம மனிதன் ஒருவன் அதிநவீன ஆயுதங்களுடன் நுழைந்துள்ளான். யாரும் எதிர்பார்க்காத நிலையில் அவன் பயணிகளை குறி வைத்துள்ளான். அவன் பயணிகளை நோக்கி சுடுவதற்குள், அந்த ரயிலில் பயணித்த அமெரிக்கர்கள் மூவர் அவன் மீது பாய்ந்து தாக்குதல் நடத்தி அவனை நிலை குலைய வைத்துள்ளனர்.
இந்த சம்பவத்தில், ஒருவரை அந்த மர்ம மனிதன் கூரான ஆயுதத்தால் தாக்கி உள்ளான். எனினும், அவர் அதனை பொருட்படுத்தாது, அவனை தாக்கி உள்ளார்.
மக்களைக் காப்பாற்றிய அமெரிக்கர்கள்
இதில் அவருக்கு கழுத்திலும், கை விரலிலும் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. இறுதியாக அவர்கள், அவனை மடக்கிப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய அந்த அமெரிக்கர்களில் ஒருவர் அமெரிக்க விமானப்படையிலும் மற்றொரு பாதுகாப்புப் பிரிவிலும் பணிபுரிவது தெரிய வந்துள்ளது.
மிகப் பெரும் தீவிரவாத சம்பவத்தை முறியடித்து மக்களைக் காப்பாற்றிய அந்த மூவருக்கும் பிரான்ஸ் அதிபர் ஹாலண்ட் நன்றி தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள அந்த மர்ம மனிதனிடம் நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில், அவன் ஜிஹாத் போராளி என்பது தெரிய வந்துள்ளது. மேலும் அவன், ஐஎஸ்ஐஎஸ் கட்டுப்பாட்டில் உள்ள சிரியாவிற்கு பயணமாகி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.