Home அரசியல் பொதுத் தேர்தலுக்கு முன்பாக நஜிப் பதவி விலகுவாரா?

பொதுத் தேர்தலுக்கு முன்பாக நஜிப் பதவி விலகுவாரா?

1150
0
SHARE
Ad

ஜனவரி 7, கோலாலம்பூர் – கம்பள வணிகர் தீபக் ஜெய்கிஷன் பிரதமர் குடும்பத்தினர் மீது வெளியிட்டு வரும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, அரசாங்கத் தரப்பிலும், பிரதமர் குடும்பத்தின் தரப்பிலும் இதுவரை முறையான பதில்கள் வெளியிடப்படவில்லை. போலீஸ் தரப்பிலிருந்தும், ஊழல் தடுப்பு ஆணையத்தின் தரப்பிலிருந்தும் கூட இந்த குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும் என்ற அறிவிப்புக்களும் இதுவரை இல்லை.

இதற்கிடையில் பிரதமர் குடும்பத்தினருடனான தனது பிரச்சனைகளை விவரிக்கும் “பிளாக் ரோஸ்” (கறுப்பு ரோஜா) என்ற தலைப்பிலான நூல் ஒன்றையும் இலவச மின் நூலாக தீபக் தற்போது வெளியிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பொதுத் தேர்தலுக்கு முன்பாக பிரதமர் பதவி விலகுவார் என்றும், அவருக்கு பதிலாக துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொய்தீன் தேசிய முன்னணி தலைவராகவும், அம்னோவின் தலைவராகவும் பதவி ஏற்பார் என்றும் அவரது தலைமையில்தான் தேசிய முன்னணி எதிர்வரும் பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் என்றும் அரசியல் வட்டாரங்களில் ஆரூடங்கள் பெருகி வருகின்றன.

#TamilSchoolmychoice

இந்த பதவி மாற்ற ஏற்பாடுகளுக்கு பின்னணியில் இருந்து தீவிரமாக செயல்பட்டு வருபவர் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் என்ற ஆரூடங்களும் உலாவத் தொடங்கியுள்ளன..

பிரதமர் நஜீப்பிற்கு எதிரான அரசியல் மூட்டைகளின் பாரம் அளவுக்கதிகமாக கூடி விட்டதால், பொதுத் தேர்தலின் போது எதிர்க்கட்சிகளின் பிரச்சாரம் கடுமையானதாக இருக்கும் என்பதோடு, பிரதமருக்கும் அவருடைய மனைவிக்கும் எதிரான எதிர்மறை விமர்சனங்களும் அதிகரிக்கும் என்பதால் இதனால் ஏற்கனவே, கடும் சிக்கலில் இருக்கும் தேசிய முன்னணி மீண்டும் வெற்றி பெறுவது கடினமாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

ஆனால் அதே சமயத்தில் நஜிப்புடன் ஒப்பிடும்போது மிகக் குறைவான எதிர்மறை அரசியல் விமர்சனங்கள் கொண்டவராக துணைப் பிரதமர் மொய்தீன் இருப்பதால் அவரது தலைமையில் தேசிய முன்னணி பொதுத் தேர்தலை எதிர்கொண்டால் அது மீண்டும் வெற்றி பெற்று மத்திய அரசாங்கத்தை தக்க வைத்துக் கொள்ளும் சாத்தியம் அதிகம் என்ற நோக்கில் அம்னோவில் அரசியல் வியூகங்கள் வகுக்கப்பட்டு வருவதாகவும் பரபரப்பாக பேசப்படுகின்றது.