சென்னை – காமராஜர் அரங்கப் பெண் ஊழியர் கொடுத்த ஊழல் மற்றும் தாக்குதல் புகாரில் நிபந்தனைப் பிணையில் மதுரையில் தங்கி, மதுரை தல்லாகுளம் காவல்நிலையத்தில் தினந்தோறும் காலை 10 மணியளவில் கையெழுத்திடும் தமிழகக் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று மதுரையிலிருந்து வந்து சென்னை எழும்பூர் 13-ஆவது பெரு நகர நீதிமன்றத்தில் ஆஜராகி முன்ஜாமீன் பெற்றார்.
காங்கிரஸ் அறக்கட்டளைக்குச் சொந்தமான சொத்துக்களில் இருந்து கிடைக்கும் வருமானத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், காமராசர் அறக்கட்டளையின் மேலாளர் நாராயணனும் சேர்ந்து கோடிக்கணக்கில் ஊழல் செய்திருப்பதாகவும்,அதற்குத் துணை போக மறுத்ததால் தன்னை உருட்டுக்கட்டையால் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், காமராசர் அரங்க அலுவலகத்தில் பணிபுரிந்து பணி இடைநீக்கம் செய்யப்பட்ட வளர்மதி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், நாராயணன் இருவர் மீதும் பெண் வன்கொடுமைச் சட்டம் மற்றும் பல்வேறு பிரிவுகளில் தேனாம்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இவ்வழக்கில் இருவரும் கைது செய்யப்படும் சூழல் ஏற்பட்டது. இதனால் இருவரும் முன் பிணை கோரி எழும்பூர் 13-ஆவது பெரு நகர நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதில் இருவருக்கும் 15 நாள் மதுரையில் தங்கியிருந்து தல்லாகுளம் காவல்நிலையத்தில் தினந்தோறும் காலை 10 மணிக்குக் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையோடு பிணை வழங்கப்பட்டது.
அப்பிணையை முறைப்படி நேற்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பெற்றுக் கொண்டார்.