Home Featured நாடு மஇகாவை ஆட்டிப் படைத்த 8-ஆம் எண்ணின் ஆதிக்கம்!

மஇகாவை ஆட்டிப் படைத்த 8-ஆம் எண்ணின் ஆதிக்கம்!

550
0
SHARE
Ad

MIC & No 8கோலாலம்பூர் – 1977 ஆம் ஆண்டு முதல் மலேசிய இந்தியர் காங்கிரஸ் (மஇகா) கட்சியுடன் 8-ஆம் எண் பல வகைகளிலும் தொடர்பு கொண்டிருப்பதும், ஆதிக்கம் செலுத்தி வருவதும், ஆச்சரியமான – சுவாரசியமான – ஒன்று.

இது ஜோதிடக் கட்டுரையோ, எண் கணித கணிப்புக் கட்டுரையோ அல்ல! அரசியல் கட்டுரைதான்!

ஆனால், 8 என்ற எண் கடந்த பல ஆண்டுகளாக மஇகாவில் எத்தகைய விதங்களில் ஊடுருவி வந்திருக்கின்றது என்பதை சுவாரசியமாக, விளக்குகின்ற கட்டுரை.

#TamilSchoolmychoice

இதைப் படித்து விட்டு, எண் கணித ஆர்வலர்களும், ஜோதிட ஆர்வலர்களும்  கருத்துகள் இருந்தால் தெரிவிக்கலாம்.

1977 சாமிவேலு – சுப்ரா போராட்டத்தில் தொடங்கிய 8ஆம் எண்

Samy-Subra1977ஆம் ஆண்டு மஇகா வரலாற்றில் மிக முக்கியமான காலகட்டம்.

1973இல் தேசியத் தலைவரான டான்ஸ்ரீ மாணிக்கவாசகம், கட்சியின் துணைத் தலைவராக டான்ஸ்ரீ ஆதி நாகப்பனைக் கொண்டு வந்தார்.

ஆனால் ஆதி நாகப்பன், 1976ஆம் ஆண்டில் அகால மரணமடைந்துவிட, இடைக்காலத் தேசியத் துணைத் தலைவராக யாரையும் நியமிக்காமல் 1977ஆம் ஆண்டு கட்சித் தேர்தலில், போட்டியின்வழி பேராளர்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர் துணைத் தலைவராகத் தொடர்வார் என அறிவித்தார் மாணிக்கா.

அந்தத் தேர்தலில் சாமிவேலு- (டான்ஸ்ரீ சுப்ரா) இருவரும் போட்டியிட்டனர். இருவரின் பிறந்த தேதியும் 8 என்பதை அப்போது எத்தனை பேர் கண்டுபிடித்தார்கள் என்பது தெரியவில்லை.

ஆம்! சுப்ராவின் பிறந்த தேதி அக்டோபர் 26 – கூட்டினால் 8.

சாமிவேலுவின் பிறந்த தேதி மார்ச் 8. அவரது அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டிருக்கும் பிறந்த தேதி வேறு என்று கூறப்பட்டாலும், அவர் பகிரங்கமாக, மஇகாவினரோடு தனது பிறந்த நாளைக் கொண்டாடுவது மார்ச் 8இல் தான்!

1977ஆம் ஆண்டில் 8ஆம் எண்ணைப் பிறந்த நாளாகக் கொண்ட இரண்டு அரசியல் தலைவர்களுக்கிடையில் தொடங்கிய போராட்டமே அடுத்த 32 ஆண்டுகளாகத் தொடர்ந்து, மஇகாவை ஆட்டிப் படைத்தது.

வாக்குகள் வித்தியாசம் 26

Tan Sri Subra1977ஆம் ஆண்டில் நிகழ்ந்த துணைத் தலைவருக்கான தேர்தலில் சாமிவேலு வெற்றி பெற்றார்.

அவர் எத்தனை வாக்குகளில் சுப்ராவை வெற்றி கொண்டார் தெரியுமா? 26 வாக்குகள் – இந்த வாக்கு எண்ணிக்கையின் கூட்டு எண் மீண்டும் 8!

சுப்ராவைக் கட்சியிலிருந்து நீக்க குறிக்கப்பட்ட நாள் மே 26

இருவருக்குமே 8ஆம் எண்ணின் ஆதிக்கம் என்பதாலோ என்னவோ, சாமிவேலு-சுப்ரா இருவருக்கும் இடையிலான அரசியல் போராட்டம் முடியாத போராட்டமாக கட்சியில் தொடர்ந்து கொண்டிருந்தது.

1981ஆம் ஆண்டில் இருவருக்கும் இடையிலான போராட்டம் உச்சகட்ட நிலையை அடைந்தபோது, சுப்ராவைக் கட்சியிலிருந்தே நீக்குவதற்கு காரணம் கோரும் கடிதத்தை அனுப்பினார் சாமிவேலு.

சுப்ராவை கட்சியிலிருந்து நீக்குவதற்கு நாள் குறிக்கப்பட்டு, மஇகாவின் மத்திய செயலவையும் கூட்டப்பட்ட அந்த நாள் 1981ஆம் ஆண்டு மே 26!

அந்தத் தேதியின் கூட்டு எண் 8!

சுப்ரா நீக்கத்தை எதிர்த்து ஏறத்தாழ 5 ஆயிரம் பேர் மஇகா தலைமையகத்தில் திரண்டிருக்க, கட்சி வரலாற்றில் மிகப் பெரிய போராட்டமாக அந்த காலகட்டத்தில் அந்தப் போராட்டம் பார்க்கப்பட்டது.

ஆனால், பின்னர் அதே நாளில் சாமிவேலு-சுப்ரா இருவரும் தனியாக அமர்ந்து பேசி சமாதானமாக, அந்தப் போராட்டமும், சுப்ராவின் நீக்கமும் ஒரு முடிவுக்கு வந்தது.

மஇகாவை நிலைகுலையச் செய்த 2008ஆம் ஆண்டு

அடுத்து வந்த ஆண்டுகளில் 8-ஆம் எண்ணின் ஆதிக்கத்தைக் கொண்ட சாமிவேலு தேசியத் தலைவராகவும் சுப்ரா துணைத் தலைவராகவும், மஇகா அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்தாலும் இருவருக்கும் இடையில் போராட்டம் தொடர்ந்து கொண்டிருந்துதான் இருந்தது.

இந்நிலையில் தான் 2008ஆம் ஆண்டு மஇகாவுக்கு மிகவும் மோசமான ஆண்டாக அமைந்தது. இந்த ஆண்டும் 8 என்ற எண்ணில்தான் முடிவடைகின்றது என்பது கவனிக்கத்தக்க விஷயம்!

2008ஆம் ஆண்டின் பொதுத் தேர்தல் நடந்த தேதி மார்ச் 8! இந்த தேதியும் 8-தான். அதுவும் சாமிவேலுவின் பிறந்த தேதி!

அந்த மார்ச் 8ஆம் தேதி நடந்த பொதுத் தேர்தலில்தான், சாமிவேலு, பழனிவேலு, சோதிநாதன், உட்பட 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தோல்வியடைந்து, டாக்டர் சுப்ரா, சரவணன், தேவமணி ஆகிய மூவர் மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினர்களாக வெல்ல முடிந்தது.

2008ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தோல்வி – கட்சி எதிர்நோக்கிய பரவலான ஆதரவு இழப்பு – ஆகிய காரணங்களால், சாமிவேலுவும் பதவி விலக வேண்டிய நெருக்குதலும் ஏற்பட்டது.

அதன்படி, 2010இல் பழனிவேல் இடைக்காலத் தேசியத் தலைவரானார்!

மஇகாவின் 8வது தேசியத் தலைவர் பழனிவேல்!

palanivel-subramaniam-MICபழனிவேல் தேசியத் தலைவரானதும் முதல் ஓரிரண்டு ஆண்டுகள் சுமுகமாகப் போய்க் கொண்டிருந்தது மஇகா அரசியல்.

அதன் பின்னர் 2013ஆம் ஆண்டில் நடந்த கட்சித் தேர்தல்களைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பங்களும், குளறுபடிகளும் அனைவரின் மனங்களிலும் இன்னும் பசுமையாகப் பதிந்திருப்பதால் அதைப் பற்றி மேலும் விளக்கிக் கொண்டிருக்கத் தேவையில்லை.

முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், சரித்திரத்தில் இல்லாத அளவுக்கு, கட்சியின் 90 சதவீத கிளைகளால் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தேசியத் தலைவர் – தான் செய்த பொருத்தமில்லாத – சட்டத்திற்கு புறம்பான சில செயல்களால் – தனது பதவியை இழந்து – இன்று கட்சியின் உறுப்பினராகக் கூட செயல்பட முடியாமல் – வெளியே நிற்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்குக் காரணம் பழனிவேலு மஇகாவின் 8வது தேசியத் தலைவராக அமைந்ததுதானோ!

இனி 9-ஆம் எண்ணின் ஆதிக்கம் ஆரம்பம்!

Dr S.Subramaniam - 9 th PRESIDENTஇப்படியாக, மஇகாவை பெரும் நெருக்கடிக்குள்ளாக்கிய 8வது தேசியத் தலைவரின் பதவிக் காலம் ஒரு முடிவுக்கு வந்து, கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி டாக்டர் சுப்ரா 9-வது மஇகா தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றார்.

இனி 9-ஆம் எண்ணின் ஆதிக்கம் – மஇகாவை எவ்வாறு வழிநடத்தப் போகின்றது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

-இரா.முத்தரசன்