புதுடில்லி – பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டங்களில் ஒன்றான ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் முதல் சுற்றில் வென்று இரண்டாவது சுற்றுக்குத் தேர்வாகியுள்ள 98 நகரங்களை மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு அறிவித்துள்ளார்.
இந்தப் பட்டியலில் தமிழகத்திலிருந்து சென்னை, திருச்சி, திருநெல்வேலி, திண்டுக்கல், தஞ்சாவூர், திருப்பூர், சேலம், வேலுார், கோவை, மதுரை, ஈரோடு, தூத்துக்குடி ஆகிய 12 நகரங்கள் இடம் பெற்றுள்ளன.
மேலும், உத்தரப் பிரதேசத்தில் 13 நகரங்களும், மகாராஷ்டிராவில் 10 நகரங்களும், மத்திய பிரதேசத்தில் 7 நகரங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
குஜராத் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தலா 6 நகரங்களும், ஆந்திரா மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் தலா 3 நகரங்களும் தேர்வாகியுள்ளன.
மேற்கண்ட நகரங்கள் அடுத்த ஆறு ஆண்டுகளுக்குள் மூன்று லட்சம் கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.
மேற்கண்ட 98 நகரங்களில் 24 நகரங்கள் தொழில் மற்றும் வர்த்தக நகரங்களாகத் திகழும். 18 நகரங்கள் கலாசாரம் மற்றும் பண்பாட்டு மையங்களாக மாறும். 3 நகரங்கள் கல்வி மற்றும் மருத்துவ வசதிகளில் தன்னிகரற்ற மையங்களாக மாற்றம் பெறும்.
இந்நகரங்களில் நவநாகரீகமான முறையில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். போக்குவரத்து நெருக்கடி, காற்று மாசு ஆகியவற்றைக் குறைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வாகனங்களுக்கு மட்டுமல்லாமல், மிதிவண்டியில் செல்வோர், நடந்து செல்வோர் ஆகியோருக்குத் தனித் தனி வழித்தடங்கள் அமைக்கப்படும்.
பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும்.
அனைத்து விதமான போக்குவரத்து வசதிகளும், அதற்கான இணைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்படும்.
அனைத்து அரசு அலுவலகங்களும் கணினி மயமாக்கப்படும்.
சுகாதாரம், கல்வி, கலை, கலாசாரம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் வசதிகள் மேம்படுத்தப்படும்.