புதுடில்லி – இந்தியாவில் மரண தண்டனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் நெருங்கி வந்துவிட்டது.
இந்தியாவில் தூக்குத் தண்டனையை ஒழிப்பதற்கு முதல் கட்டமாக, “தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு மட்டுமே தூக்குத் தண்டனை வழங்கலாம்; மற்ற வழக்குகளில் ஆயுள் தண்டனை, கடுங்காவல் தண்டனை போன்ற தண்டனைகள் விதிக்கலாம்; ஒருபோதும் தூக்குத் தண்டனை விதிக்கக் கூடாது எனச் சட்ட ஆணையம் பரிந்துரைக்க உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
மரண தண்டனையை அடியோடு ஒழிக்க வேண்டும் என்ற குரல் இந்தியாவில் நீண்ட காலமாக ஓங்கி ஒலித்து வருகிறது. குற்றங்களுக்கு மரண தண்டனை தீர்வாகாது என்கிற கருத்தும் வலுத்து வருகிறது.
இதுபற்றி ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி சட்ட ஆணையத்திற்கு மத்திய அரசு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து சட்ட ஆணையம், மாநில அரசுகள், சட்ட நிபுணர்கள் மற்றும் பல்வேறு துறையினரிடம் இது தொடர்பாகக் கருத்துக்கள் கேட்டு, அதனடிப்படையில் அறிக்கை ஒன்றைத் தயாரித்து, அடுத்த வாரம் மத்திய அரசிடம் தாக்கல் செய்ய உள்ளது.
அந்த அறிக்கையில் மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
உலகில் 98 நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது. 35 நாடுகளில் மரண தண்டனையை நிறுத்துவது பற்றிய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
ஆகவே ,சட்ட ஆணையத்தின் முடிவை மத்திய அரசு ஏற்றுக் கொண்டால், மரண தண்டனையை ஒழிக்கும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய மாற்றங்கள் செய்யப்படும் என நம்பப்படுகிறது.