Home Featured நாடு “மஇகா உறுப்பினர்கள் பெர்சே பேரணியில் கலந்து கொண்டால் கடும் ஒழுங்கு நடவடிக்கை” – தலைமைச் செயலாளர்...

“மஇகா உறுப்பினர்கள் பெர்சே பேரணியில் கலந்து கொண்டால் கடும் ஒழுங்கு நடவடிக்கை” – தலைமைச் செயலாளர் சக்திவேல் எச்சரிக்கை

652
0
SHARE
Ad

Sakthivel alagappan -Featureகோலாலம்பூர்- நடைபெறவிருக்கும் பெர்சே 4.0 பேரணி சட்டவிரோதமானது என தேசிய முன்னணி அரசாங்கமும், மலேசியக் காவல் துறையும் அறிவித்துள்ளதால், இந்தப் பேரணியில் மஇகா உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என அனைத்து மஇகா உறுப்பினர்களுக்கும் அறிவுறுத்தியுள்ள மஇகா தலைமைச் செயலாளர் ஏ.சக்திவேல், அவ்வாறு உறுப்பினர்கள் யாராவது கலந்து கொண்டது கண்டுபிடிக்கப்பட்டால், கட்சி அவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

இன்று பத்திரிக்கைகளுக்கு விடுத்துள்ள அறிக்கையொன்றில் மஇகா தலைமைச் செயலாளர் ஏ.சக்திவேல் மஇகா உறுப்பினர்களுக்கு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

bersihlogo-L-1கட்சியின் அனைத்து மட்டத் தலைவர்களும் நடைபெறவிருக்கும் பெர்சே பேரணியில் மஇகா உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றார்களா என்பதை அணுக்கமாகக் கண்காணித்து வருவர் என்றும் சக்திவேல் இன்று பத்திரிக்கைகளுக்கு விடுத்த அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

தேசிய முன்னணி அரசாங்கத்தின் உறுப்பியக் கட்சி என்ற முறையில் கூட்டுப் பொறுப்பு ஏற்று செயலாற்றுவதில் மஇகா முழுநம்பிக்கை கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்ட சக்திவேல், பெர்சே 4.0 பேரணி தொடர்பில் தேசிய முன்னணி தலைமைத்துவம் எடுத்திருக்கும் முடிவுகளை கட்சி மதிக்கின்றது என்றும் கூறினார்.

அதே வேளையில் பிரச்சனைகளை பேச்சுவார்த்தைகள் மூலமும், பரஸ்பர கருத்துப் பரிமாற்றங்களின் வழியும்தான் தீர்க்க வேண்டும் என்பதில் மஇகா உறுதி பூண்டுள்ளது. மக்கள் தங்களின் அதிருப்திகளை வெளிப்படுத்துவதற்கும், தங்களின் எதிர்ப்புக் குரல்களையும், மாற்றுக் கருத்துக்களையும் பதிவு செய்யவும் இன்னும் போதுமான வாய்ப்பு வசதிகளும், வழிமுறைகளும் இருக்கின்றன என்பதிலும், அதற்காக பெர்சே 4.0 போன்ற வீதிப் போராட்டங்கள் தேவையில்லாத, பொருத்தமில்லாத ஒன்று என்றும் சக்திவேல் விவரித்தார்.

“இருப்பினும் ஒரு ஜனநாயகக் கட்சி என்ற முறையில் ஜனநாயக முறையில் மக்கள் முன்னெடுக்கும் எந்தப் போராட்டத்தையும் மஇகா நிச்சயம் ஆதரிக்கும். ஆனால், எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் நடைபெறும் இந்த பெர்சே 4.0 பேரணி சட்டவிரோதமானது என அரசாங்கமும், காவல் துறையினரும் அறிவித்துள்ள நிலையில், இந்தப் பேரணியில் இருந்து ஒதுங்கியிருக்க வேண்டும் என மஇகா உறுப்பினர்களுக்கு நாங்கள் எச்சரிக்க விரும்புகின்றோம்” என்றும் சக்திவேல் கூறினார்.

“எங்களின் எச்சரிக்கையையும் மீறி பெர்சே பேரணிகளில் கலந்து கொள்ளும் மஇகா உறுப்பினர்கள் மீது கட்சிக் கட்டுப்பாடு கருதி, கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றோம்” என்று சக்திவேல் எச்சரித்துள்ளார்.