கோலாலம்பூர் – நாளை நடைபெறவுள்ள பெர்சே 4.0 பேரணியில் அரசாங்க ஊழியர்கள் பங்கேற்க முடியாது காரணம் அவர்கள் பொது ஆணைகளுக்குக் கட்டுப்பட்டுள்ளார்கள் என சரவாக் முதல்வர் அட்னான் சாத்திம் தெரிவித்துள்ளார்.
கூச்சிங்கில் உள்ள முதலமைச்சர் அலுவலகம் இது தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கூச்சிங்கில் நடைபெறவுள்ள பெர்சே பேரணி தொடர்பில் இன்று காலை சில கேள்விகளுக்கு அட்னான் அளித்த பதிலை முன்வைத்து பல்வேறு இணையதளங்கள் வெளியிட்டிருந்த கட்டுரைகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டிருந்தது.
“அவர் கூறியதன் அர்த்தம் என்னவென்றால், சட்டத்திற்கு உட்பட்டு, அரசாங்க ஊழியர்கள் இந்தப் பேரணியில் பங்கேற்கும் உரிமை அவரவரிடத்தில் உள்ளது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இன்று காலை பேரணி குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அட்னான் கூறிய பதிலில், சோங் கெங் ஹாய் களத்தில் நாளை பெர்சே 4.0 பேரணியை நடத்த மாநில அரசாங்கம் அனுமதியளித்துள்ளது என்று தெரிவித்திருந்தார்.
எனினும், அப்பேரணியில் கலந்து கொள்பவர்கள் சரவாக்கின் வழிமுறைகளைப் பின்பற்றி மிதமாகவும், அமைதியாகவும் பேரணியை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.