ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் இருந்து ஹங்கேரியன் எல்லையை கடக்கும் நெடுஞ்சாலை ஓரத்தில், கண்டெய்னர் லாரி ஒன்று நேற்று நிறுத்தப்பட்டிருந்தது. பல மணி நேரங்களாக அந்த லாரியை யாரும் எடுக்காததால், சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், காவல்துறையினருக்கு தெரிவித்தனர்.
குறிப்பிட்ட அந்த பகுதிக்கு வந்த காவல்துறையினர் லாரியை சோதனையிட்டனர். குளிர்ந்த நிலையில் இருந்த அந்த லாரியின் கண்டெய்னரை திறந்து பார்த்த போது 70-க்கும் மேற்பட்ட சடலங்கள் இருந்துள்ளன.
இது தொடர்பாக ஆஸ்திரியாவின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், “கண்டெய்னரில் 70-க்கும் மேற்பட்ட சடலங்கள் இருந்துள்ளன. ஹங்கேரியன் காவல்துறை அதிகாரிகளிடமும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இது தொடர்பான தகவல்கள் வெளியாகும்” என்று தெரிவித்துள்ளது.
மத்திய ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில், அகதிகள் சட்டவிரோதமாக குடியேறி வருவதும், அவர்களை ஆள் கடத்தல் கும்பல் கொலை செய்வதும் மிகப் பெரிய அளவில் சர்ச்சையாகி வருகிறது. அதன் காரணமாக, கண்டெய்னரில் இருந்த சடலங்கள், சட்ட விரோதமாக குடியேறியவர்களின் உடல்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.