Home வணிகம்/தொழில் நுட்பம் சீனா – ஐரோப்பா தேவைகளால் செம்பனை எண்ணெய் விலை மேலும் உயரும்

சீனா – ஐரோப்பா தேவைகளால் செம்பனை எண்ணெய் விலை மேலும் உயரும்

1555
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசியாவின் செம்பனைக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் பலவிதமான கட்டுப்பாடுகளையும், தடைகளையும் விதித்து வந்தாலும் செம்பனைக்கான தேவையும், விலையும் தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்குக் காரணம் சீனாவிலும், ஐரோப்பாவிலும் உயிரி எரிபொருள் (biofuel) மீதான தேவையும் பயன்பாடும் அதிகரித்து வருகின்றது. அண்மையில் கூட 891 அமெரிக்க டாலர் மதிப்புள்ள 1.62 மில்லியன் டன் செம்பனை எண்ணெய் ஏற்றுமதிக்கு சீனாவின் 4 நிறுவனங்கள் மலேசியாவின் நிறுவனங்களுடன் உடன்படிக்கையை கையெழுத்திட்டன.

மேற்கத்திய நாடுகளின் கட்டுப்பாடுகளால் அண்மைய மாதங்களில் மலேசியாவின் செம்பனை கையிருப்பு தேங்கிக் கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

#TamilSchoolmychoice

சீனா மலேசிய செம்பனை எண்ணெயை வாங்கத் தொடங்கியவுடன் செம்பனையின் தேக்கமும் குறையத் தொடங்கியிருப்பதாக வணிக வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பெட்ரோலிய எண்ணெய் விலை கடந்த 3 மாதங்களில் 27 விழுக்காடு அதிகரித்திருக்கும் நிலையில் செம்பனை எண்ணெய் விலையோ அதிக மாற்றங்களின்றி நிலையாக இருந்து வருகிறது.

இதன் காரணமாக, உயிரி எரிபொருளுக்கான தேவை இயல்பாகவே அதிகரித்திருக்கிறது.

கடந்த 2 மாதங்களாக 8 விழுக்காடு வரையில் சரிவு கண்ட செம்பனை எண்ணெய், இன்று வெள்ளிக்கிழமை ஒரு டன் 2,107 ரிங்கிட் என்ற விலையில் நிலை பெற்றிருக்கிறது.