சென்னை – மதுரையில் தங்கியிருந்து அங்குள்ள தல்லாகுளம் காவல்நிலையத்தில் தினந்தோறும் 10 மணிக்குக் கையெழுத்திடும் முன்பிணை நிபந்தனைகளைத் தளர்த்தக் கோரி ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நிபந்தனைகளைத் தளர்த்த நீதிபதி மறுத்துவிட்டார்.
காமராசர் அரங்கப் பெண் ஊழியர் கொடுத்த கொலை மிரட்டல் புகாரில் தேனாம்பேட்டை காவல்துறையினர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இவ்வழக்கில் முன்பிணை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மதுரையில் 15 நாட்கள் தங்கியிருந்து தல்லாகுளம் காவல் நிலையத்தில் தினமும் காலை 10 மணிக்குக் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்பிணை வழங்கினார்.
அதன்படி, ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மதுரையில் தங்கியிருந்து தல்லாகுளம் காவல் நிலையத்தில் நேற்று கையெழுத்திடச் சென்ற போது அதிமுகவினர் அவர் வந்த காரில் முட்டைகளையும் செருப்பையும் வீசித் தாக்குதல் நடத்தியதோடு, பெண்கள் துடைப்பத்தைக் காட்டி அவருக்கு எதிராகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இச்சம்பவத்தைச் சுட்டிக் காட்டி ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தனக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளைத் தளர்த்தும்படி கேட்டார்.
இந்நிலையில் நேற்று இளங்கோவன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அரசியல் ரீதியான பணிகளை மேற்கொள்ளவுள்ளதால், மதுரையில் தங்கி கையெழுத்திடன வேண்டும் என்று நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், நீதிமன்ற உத்தரவுகளை ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் எனக் கூறி நிபந்தனைகளைத் தளர்த்த மறுத்து விட்டார்.