புதுடில்லி – ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு தொடர்பாகக் கர்நாடக அரசு தாக்கல் செய்த மனுவிற்கு லெக்ஸ் பிராபர்டீஸ் உள்ளிட்ட 6 நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளன.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரும் விடுவிக்கப்பட்டதையும், இவ்வழக்கில் தொடர்புள்ள ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் பினாமி நிறுவனங்களான லெக்ஸ் பிராபர்டீஸ் உள்ளிட்ட 6 நிறுவனங்கள் விடுவிக்கப்பட்டதையும் எதிர்த்துக் கர்நாடகா அரசும் திமுக சார்பில் அன்பழகனும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.
இம்மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மூன்று வாரத்திற்குள் இது குறித்துப் பதிலளிக்கும் படி ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேருக்கும் மற்றும் 6 நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டது.
ஜெயலலிதா சார்பில் இரு தினங்களுக்கு முன் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று 6 நிறுவனங்களும் பதில் மனு தாக்கல் செய்துள்ளன.
அந்த நிறுவனங்கள் தாக்கல் செய்துள்ள மனுவில்,கர்நாடக அரசு உள்நோக்கத்துடன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளதாகவும், தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எதிராகப் போதிய ஆதாரங்கள் இல்லை எனவும், அதைக் கர்நாடக உயர்நீதிமன்றமே தனது தீர்ப்பில் கூறியுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிறுவனங்களின் மனுவிற்குக் கர்நாடக அரசு ஒருவாரத்தில் பதில் அளிக்கவுள்ளதாகக் கூறியுள்ளது.