கோலாலம்பூர்- இன்று நடைபெற்ற பெர்சே 4 பேரணியில் தனது மனைவி டாக்டர் சித்தி ஹஸ்மாவுடன் கலந்து கொண்ட முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமத்திடம் பத்திரிக்கையாளர்கள், தாங்கள் பேரணியில் கலந்து கொண்டதற்கான காரணம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “நான் பெர்சே பேரணியை காண வந்தேன்” என்று புன்னகையுடன் கூறினார்.
டாக்டர் சித்தி ஹஸ்மா, “இது தான் மக்கள் சக்தி” என்று பேரணி குறித்து தெரிவித்தார்.
இதற்கிடையே, இன்று மதியம் ஜோகூரின் பாசிர் கூடாங் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய மகாதீர், “நான் பொதுவாக ஆர்பாட்டங்களை விரும்புவதில்லை. பிரச்சனைகளை தீர்ப்பதற்கு வேறு வழிகள் உள்ளன. எனினும், அந்த வழிகள் அனைத்தும் தற்போது மூடப்பட்டுள்ளன. இது குறித்து புகார் செய்தால் காவல்துறை நம்மை தான் விசாரிக்கும். எனினும், இது காவல்துறையின் தவறல்ல. உயர் பதவியில் இருப்பவரின் தவறு. அந்த ஒருவர் தான் நாட்டின் சட்ட திட்டங்கள் அனைத்தையும் மீறினார். அந்த ஒருவர் தான் மலேசியாவின் இன்றைய நிலைக்கு காரணம்” என்று அவர் தெரிவித்தார்.
மேலும் அவர், அந்த கூட்டத்தில் வேலைவாய்ப்பின்மை பற்றி எழுப்பிய கேள்விக்கு, “நீங்கள் நஜிப்பை பதவியில் இருந்து விடுவிக்காத வரை, வேலைவாய்ப்பின்மையில் இருந்து உங்களுக்கு விடுதலை இல்லை” என்று கூறினார்.
பெர்சே பேரணியில் மகாதீர் கலந்து கொள்வாரா? மாட்டாரா? என ஐயப்பாடு இருந்து வந்த நிலையில், அவரின் வருகை பெர்சே ஆதரவாளர்களுக்கு மிகப் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.