கோலாலம்பூர் – நேற்று பின்னிரவு வரை பெர்சே பேரணியில் கலந்து கொண்டு வீடு திரும்பியவர்கள், டத்தாரான் மெர்டேக்காவைச் சுற்றியுள்ள வளாகங்களிலேயே படுத்துத் தூங்கி, தங்களின் போராட்டங்களை அங்கேயே தொடர்ந்தவர்கள் என பெர்சே 4.0 பேரணி இன்று இரண்டாம் நாளாகத் தொடர்ந்தது.
நஜிப் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை அடிப்படையாக வைத்து நடத்தப்பட்ட பெர்சே 4.0 போராட்டத்தில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை இன்று காலை முதல் மீண்டும் உயர்ந்து வருகின்றது. நண்பகல் அளவில் பெர்சே பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 30,000 ஆக உயர்ந்ததாக தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையில், இன்று காலை முதல் பங்கேற்பாளர்கள் உற்சாக மனநிலையில் இருந்தனர். ஏரோபிக்ஸ் உடற்பயிற்சிகள் செய்து கொண்டும், நடனங்கள் ஆடிக் கொண்டும், திருவிழாக் கோலமாக பெர்சே 4.0 பேரணியை இன்று மாற்றிவிட்டனர், அதன் பங்கேற்பாளர்கள்!
சோகோ வணிக வளாகம் முன்னாள் திரண்டிருக்கும் கூட்டம் கட்டுக் கோப்புடன் இருப்பதாகவும், இதுவரை தகாத சம்பவங்களோ, அசம்பாவிதங்களோ நடைபெறவில்லை என அங்கு காவலுக்கு இருக்கும் காவல் துறை அதிகாரி அஸ்லீ அபு ஹாசான் கூறியதாக மலேசியாகினி செய்தி வெளியிட்டுள்ளது.
மலாக்காவில் மஞ்சள் டி-சட்டைகள் அணிந்ததாக 12 பேர் கைது
இதற்கிடையில், மலாக்காவில் பெர்சே 4.0 வாசகங்களைக் கொண்ட டி-சட்டைகளை அணிந்ததற்காக 12 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக, காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.