சென்னை – 2016 ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள தமிழகச் சட்டசபைத் தேர்தல் தொடர்பாக, ‘மக்கள் ஆய்வு மையம்’ வெளியிட்ட கருத்து கணிப்பில் அடுத்து முதல்வராக வருவதற்கு மக்களின் ஆதரவு ஜெயலலிதாவிற்கு முதலிலும், ஸ்டாலினுக்கு இரண்டாவதும், கருணாநிதிக்கு மூன்றாவதாகவும் உள்ளதாகத் தெரிவித்திருந்தது.
இந்தக் கருத்துக் கணிப்பு வெளியானதில் இருந்து, அடுத்த தேர்தலில் திமுக-வின் முதல்வர் வேட்பாளராக ஸ்டாலினைத் தான் அறிவிக்க வேண்டும்’ என அவரது மு.க.ஸ்டாலின் ஆதரவு மாவட்டச் செயலர்களும் ஸ்டாலின் குடும்பத்தினரும் திமுகவின் முக்கியத் தலைவர்களிடம் வற்புறுத்தி வருவதாகவும், அதனால் கருணாநிதி – ஸ்டாலின் இடையே புகைச்சல் உருவாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து கருணாநிதி, கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் மாவட்டச் செயலர்கள் சிலரைக் கோபாலபுரம் இல்லத்திற்கு அவசரமாக அழைத்து, ஆலோசனை நடத்தியுள்ளார்.
அதேபோல், ஸ்டாலினும் தன் ஆதரவு மாவட்ட செயலர்களை வீட்டிற்கு வரவழைத்து ஆலோசித்துள்ளார்.
இந்நிலையில், பெரம்பலூர் சுற்றுப்பயணம் செல்லவிருந்த ஸ்டாலின் தனது சுற்றுப்பயண நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டுப் பெங்களூரில் உள்ள சகோதரி செல்வி வீட்டிற்குச் சென்று இதுகுறித்து ஆலோசனை செய்யவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தகைய சூழலால் திமுக-வினரிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.