புதுடில்லி – டில்லியில் உள்ள அகில இந்திய வானொலி நிலையத்தில் இராமாயணத்தின் நவீன இலக்கவியல் பதிப்பைப் (டிஜிட்டல் பதிப்பைப்) பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டார்.
வால்மீகி முனிவரால் வடமொழியில் இயற்றப்பட்ட பழம்பெரும் இதிகாசம் இராமாயணம் ஆகும். இதைத் துளசிதாசர் இந்தியில் “ராம்சரித்மானஸ்” என்ற பெயரில் மொழிபெயர்த்தார்.
போபாலில் உள்ள அகில இந்திய வானொலி நிலையத்தின் இயக்குநர் சமர் பகதூர் சிங் என்பவரின் முயற்சியால், இந்தி மொழியிலான இராமாயணம் நல்ல பாடகர்கள் பாட, 1980-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டு, வடஇந்திய வானொலிகளில் தினமும் ஒலிபரப்பப்பட்டு வந்தது.
அவ்வாறு இசை வடிவில் ஒலிபரப்பட்டு வந்த இராமாயணம் தற்போது டிஜிட்டல் வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த டிஜிட்டல் பதிப்பை, டில்லி அகில இந்திய வானொலி நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டு இராமாயணத்தின் சிறப்புகளைப் பற்றிப் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் நிதி மற்றும் மத்தியத் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அருண் ஜேட்லி, அகில இந்திய வானொலி நிலையத் தலைமைக் குழுமமான பிரசார் பாரதியின் தலைவர் ஏ.சூர்யபிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.