ஒகேனக்கல் – ஒகேனக்கல் காவிரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.
சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த கைபேசிக்கடை உரிமையாளர் ராஜேஷ் குமார், தனது திருமண நாளைக் கொண்டாடுவதற்காக மனைவி மற்றும் குடும்பத்தாரோடு ஒகேனக்கலுக்குச் சென்றார்.
ஒகேனக்கல்லில் படகு சவாரி பிரபலம் என்பதால், குடும்பத்தார் அனைவரும் ஒரே படகில் ஏறிப் பயணம் சென்றனர்.
காவிரி ஆற்றில் பாறைகளுக்கு இடையே சென்று கொண்டிருந்த படகு நீர்ச் சுழலில் சிக்கித் திடீரெனக் கவிழ்ந்தது. படகோடி முதற்கொண்டு அதில் பயணம் செய்த 10 பேரும் ஆற்றில் மூழ்கினர்.
அந்தப் படகிற்குப் பின்னால் சற்று தூரத்தில் வந்து கொண்டிருந்த மற்ற படகோட்டிகள் ஆற்றுக்குள் குதித்து ராஜேஷ், அவரது மனைவி கோமதி, குழந்தை சஞ்சய், படகோட்டி காஜா முருகன் ஆகிய நான்கு பேரைப் பத்திரமாக மீட்டனர். மீதி ஆறு பேரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
அவர்களை உடனடியாக மீட்க முடியவில்லை. தீயணைப்புப் படை வீரர்கள் வந்து நீண்ட நேரத் தேடுதலுக்குப் பின் வெவ்வேறு இடங்களில் சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவிற்குள் மற்ற 6 பேரும் பிணமாக மீட்கப்பட்டனர்.
அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிக்கொண்டு, பாதுகாப்புக் கவசம் அணியாமல், தடை செய்யப்பட்ட பகுதிக்கு சென்றதால் விபத்து ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கோர விபத்திற்குத் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.