Home உலகம் விடுதலைப்புலிகளைக் காட்டிக் கொடுக்கவில்லை; பிரபாகரனின் உயிரைக் காத்தேன்”- கருணா!

விடுதலைப்புலிகளைக் காட்டிக் கொடுக்கவில்லை; பிரபாகரனின் உயிரைக் காத்தேன்”- கருணா!

570
0
SHARE
Ad

pppகொழும்பு – விடுதலைப் புலிகள்  இயக்கத் தலைவர் பிரபாகரனின் வலது கரம் போலச் செயல்பட்டுப் பின்பு அவரால் துரோகி எனப் பெயர் வாங்கி, அதன்பின்பு விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறி, ராஜபக்சேவின் கட்சியில் சேர்ந்து அமைச்சர் பதவியும் பெற்ற கருணா அம்மான், “ராஜபக்சேவுடன் சேர்ந்து நான் புலிகள் இயக்கத்தைக் காட்டிக் கொடுக்கவில்லை. மாறாகப் பிரபாகரனின் உயிரைப் பலமுறை காப்பாற்றியுள்ளேன்” எனக் கூறியுள்ளார்.

2009-ஆம் ஆண்டு நடந்த யுத்தத்தின் போது ராஜபக்சேவின் படைகளோடு சேர்ந்து புலிகளுக்கு எதிராகச் சண்டை இட்டதாகவும்,அவர் புலிகளைக் காட்டிக் கொடுத்ததால் தான் யுத்தம் விரைவில் முடிவுக்கு வந்தது என்றும் அவர் மீது குற்றச்சாட்டு உண்டு.

ஆனால், கருணா அதை மறுக்கிறார்.

#TamilSchoolmychoice

“நான் மகிந்தவுடன் இணையும்போதே ‘புலிகளை அழிக்கவோ, அவர்களைக் காட்டிக் கொடுக்கவோ என்னை அழைப்பீர்களானால் நான் வரமாட்டேன்; நான் வருவது மக்களின் நன்மைக்காகத் தான் என்று கூறிவிட்டேன். அவரும் அதை ஏற்றுக் கொண்டதால்தான் அவருடன் இணைந்தேன்.

புலிகளை நான் தான் காட்டிக் கொடுத்தேன் என்பது முற்றிலும் தவறான கருத்து. விடுதலைப் புலிகளைக் காட்டிக் கொடுக்க வேண்டிய அவசியம் எதுவும் எனக்கில்லை.

இறுதிப் போரின்போது வெளிநாட்டு உதவிகள் தங்களைக் காக்கும் என்று நம்பி யுத்த தந்திரங்களைப் புலிகள் பின்பற்றத் தவறிவிட்டார்கள். அதனாலேயே அவர்கள் தோற்றுவிட்டார்கள். நான் யாரையும் காட்டிக்கொடுக்கவில்லை.

அதே போல், ராஜபக்சேவின் படைகளோடு சேர்ந்து நான் படையை நகர்த்தினேன் என்பதும் முற்றிலும் தவறானது.

விடுதலைபுலிகளுக்காக நான் சந்திரிகா அரசு முன்னெடுத்த ஜெயசிக்குறு என்ற கொடூர யுத்தம், ஆனையிறவுச் சமர் போன்ற பெருவெற்றிகளைப் பெற்றுக் கொடுத்திருக்கிறேன். அதுமட்டுமல்ல; விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் உயிரையும் காப்பாற்றியிருக்கிறேன்.

இந்திய ராணுவக் கெடுபிடிகளின்போது பொட்டு அம்மான், சூசை, பானு என்று வடபகுதித் தளபதிகள் பலரும் இந்தியாவுக்கு ஓடிவிட்டார்கள். நான் மட்டக்களப்பில் இருந்து போய் தலைவரை முல்லைத் தீவுக் காட்டுக்குள் வைத்துக் காப்பாற்றினேன்.

இதேபோல் யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவு நோக்கிய ஒரு முற்றுகையின்போதும் அதை அடித்து நொறுக்கிப் பிரபாகரனைக் காப்பாற்றியிருக்கிறேன்.

அவரது உயிரைப் பல தருணங்களில் காப்பாற்றியும் கூட ,பிரபாகரன் என்னைத் துரோகி என்றது எனக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து வந்து ராஜபக்சேவின் கட்சியில் சேர்ந்தேன்” எனப் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.