ஐதராபாத்- கொரியாவின் புகழ்பெற்ற பூசன் சர்வதேசத் திரைப்பட விழாவில் பங்கேற்க பாகுபலி படம் தேர்வாகியுள்ளது. மேலும்,ஆஸ்கார்’ போட்டியில் பங்கேற்கச் செய்யவும் முடிவு செய்து, ‘ஆஸ்கார்’ விருதுக் குழுவினருக்குப் ‘பாகுபலி’ படக் குழுவினர் விண்ணப்பித்திருக்கிறார்கள்.
ஆசியாவில் வெளியாகும் முக்கியத் திரைப்படங்களையும், புதிய கலைஞர்களையும் ஊக்குவிக்கும் விதமாக ஆண்டுதோறும் சிறந்த படைப்புகளைத் திரையிடுகிறது பூசன் சர்வதேசத் திரைப்பட விழா.
இந்தியாவில் பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப் உட்பட தலைசிறந்த உலக சினிமா பிரபலங்கள் கூடி, இவ்வாண்டு திரையிடத் தகுதியான படங்களைத் தேர்வு செய்துள்ளனர்.
வரும் அக்டோபர் மாதம் 1-ஆம் தேதியில் இருந்து 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த விழாவில் இவ்வாண்டு 75 நாடுகளில் இருந்து, 121 படங்கள் திரையிடத் தேர்வாகியுள்ளன.
‘பாகுபலி’ திரைப்படம் ‘ஓப்பன் சினிமா’ என்ற வகையில் அக்டோபர் மாதம் 4, 7 மற்றும் 9-ஆம் தேதிகளில் திரையிடப்படவுள்ளது.
இவ்விழாவில் பங்கேற்பதற்காக இயக்குநர் ராஜமெளலி கொரியா செல்லவிருக்கிறார்.