கோலாலம்பூர் – மலேசியா ஏர்லைன்ஸ் பெர்ஹாட்டின் புதிய பயணம், நேற்று பயணிகளுடனான சந்திப்பிற்கு பிறகு திட்டமிட்டபடி வெற்றிகரமாகத் துவங்கியது.
மாப்(MAB) நிறுவனம் புதிதாக அறிமுகமாவதால், அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் கிறிஸ்டோப் முல்லர் மற்றும் சில நிர்வாக அதிகாரிகள் நேற்று நேரடியாக கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு வருகை புரிந்தனர்.அவர்கள் அங்கு கூடி இருந்த பயணிகளுடன் உரையாடி தங்களது நிறுவனத்தின் புதிய எழுச்சி பற்றிய கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
மாப்-ன் முதல் உள்நாட்டு சேவையாக எம்எச்1138 விமானம் பினாங்கிற்கு பறந்தது. புதிய நிறுவனம் பற்றி முல்லர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்றைய நாளை வரவேற்பதில் நாங்கள் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளோம். புதிய நிறுவனத்திற்காக நாங்கள் கடந்த சில மாதங்களாக கடுமையாக உழைத்துள்ளோம். அத்தகைய காலங்களில் எங்களுக்கு துணையாக இருந்தவர்களுக்கு எங்களின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மாப் நிறுவனத்திற்கு, கடந்த வெள்ளிக்கிழமை சிவில் விமான போக்குவரத்துத் துறை ஆணையம், விமானங்களை இயக்குவதற்கான ஏர் ஆபரேட்டர் சான்றிதழ் (AOC) வழங்கியது குறிப்பிடத்தக்கது.
எம்எச் 370, எம்எச் 17 ஆகிய இரு பெரும் பேரிடர்கள், பொருளாதார நெருக்கடி, வர்த்தக சரிவு என பல்வேறு கடுமையான சோதனைகளுக்கு பிறகு, மலேசியா ஏர்லைன்ஸ் பெர்ஹாட் என்ற பெயரில் புதிய நிறுவனமாக மாஸ் உருவாகி இருப்பதற்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.