சென்னை- காங்கிரஸ் அறக்கட்டளைக்குச் சொந்தமான காமராசர் அரங்கத்தில் பணியாற்றிய அலுவலகப் பெண் ஊழியர் வளர்மதி என்பவர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது கொடுத்த ஊழல் மற்றும் தாக்குதல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு மதுரையில் தங்கி அங்குள்ள தல்லாகுளம் காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் முன் பிணை வழங்கியது.
இந்த நிபந்தனையைத் தளர்த்தக் கோரி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மனு தாக்கல் செய்தார்.
ஆனால், நீதிமன்ற உத்தரவிற்குக் கட்டுப்பட வேண்டும் என்று கூறி முன்பு முன் பிணை நிபந்தனையைத் தளர்த்த மறுத்துவிட்டது.
இந்நிலையில், மீண்டும் அவரது கோரிக்கையை மறு பரிசீலனை செய்த நீதிமன்றம் இன்று அவரது முன் பிணை நிபந்தனையைத் தளர்த்த முன்வந்தது.
இனி அவர் தினந்தோறும் மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் கையெழுத்திடத் தேவையில்லை என்று நிபந்தனையை நீக்கியது.
ஆனால், இளங்கோவன் விசாரணைக்கு ஒத்துழைக்கத் தவறினால், இந்தச் சலுகை நீக்கப்படும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.