சென்னை- இலங்கை இறுதிப் போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து அனைத்துலக நீதிமன்ற விசாரணை தேவையில்லை; உள்நாட்டு நீதிமன்ற விசாரணையே போதுமானது என்று அறிவித்த அமெரிக்காவைக் கண்டித்து மதிமுக தலைவர் வைகோ சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
ஒரு வாரத்திற்கு முன்பு இலங்கைக்கு அரசு முறைப் பயணமாக வந்திருந்த அமெரிக்க வெளியுறவுத்துறைத் துணைச் செயலாளர் நிஷா தேசாய், இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக உள்நாட்டு விசாரணையே போதுமானது என்று அமெரிக்கா முடிவெடுத்திருப்பதாகவும், அது சம்பந்தமாக மற்ற நாடுகளுடன் பேசி வருவதாகவும் தெரிவித்தார்.
இதற்குத் தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். அமெரிக்காவின் இந்த முடிவைக் கண்டித்து அமெரிக்கத் தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று வைகோ அப்போது அறிவித்தார்.
அதன்படி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது வைகோ கூறியதாவது:
“இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களுக்கு உள்நாட்டு அளவிலான விசாரணை போதுமானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. இது மிகவும் கண்டித்தக்கது. கொலையைச் செய்தவரே அந்தக் குற்றத்தை விசாரிக்கலாம் என்பது எப்படி நியாயமாகும்?
இலங்கையில் ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்த மைத்ரி பால சிறிசேனாவையும், ராஜபக்சேவையும், ரனில் விக்ரமசிங்கேவையும் நாங்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டோம். இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவித் தமிழர்களுக்கு ஜெனீவாவில் உள்ள மனித உரிமை ஆணையத்தில் தீர்வு கிடைக்கவேண்டும்
ஈழத்தமிழர் படுகொலை விவகாரத்தில் உள்நாட்டு விசாரணையை ஆதரிப்போம் என்று பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறைத் துணைச் செயலாளர் நிஷா தேசாயின் பேச்சுக்கு எதிராக, தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் கொண்டுவரவேண்டும். இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிக்கை வெளியிடவேண்டும்” என்றார்.
இதனைத்தொடர்ந்து ஈழத்தமிழர் படுகொலை விவகாரத்தில் அனைத்துலக விசாரணை நடத்த அமெரிக்கா வலியுறுத்தவேண்டும், இலங்கையில் தனி ஈழம் உருவெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும், பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினைச் சென்னையில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தில் கொடுப்பதற்காக வைகோ, மதிமுக வக்கீல் தேவதாஸ் ,வக்கீல் நன்மாறன் ஆகியோர் சென்றனர்.
ஆனால் அவர்கள் தூதரக அதிகாரியைச் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை.
தூதரகத்தைச் சேர்ந்த அரசியல் பொருளாதார ஆலோசகர் வந்து மனுவினை வாங்கிச் சென்றார்.
இது பெருத்த அவமானம் என்று வைகோ, அமெரிக்கத் தூதரக அதிகாரிகளைச் சாடினார்.