Home இந்தியா சரவணனுக்கு சென்னை ரோட்டரி சங்கத்தின் ‘குளோபல் ஐகோன்’ விருது!

சரவணனுக்கு சென்னை ரோட்டரி சங்கத்தின் ‘குளோபல் ஐகோன்’ விருது!

88
0
SHARE
Ad

சென்னை : மலேசிய இந்திய அரசியல்வாதிகளில், தமிழர்கள் வாழும் அயல்நாடுகளில் இலக்கிய உரை நிகழ்த்தவும் தமிழ் மொழி தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கு பெறவும் எப்போதும் அழைக்கப்படுபவர் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மலேசிய இந்திய காங்கிரஸ் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன். தனது சிறப்பான, கம்பீரமான, சுவை மிக்க உரைகளின் மூலம் சொல்வேந்தர் என்னும் அடைமொழியையும் பெற்றவர்.

அவருக்கு அண்மையில் வடசென்னை ரோட்டரி கிளப் ‘குளோபல் ஐகான்’ விருது வழங்கி கெளரவித்தது. அவரின் அனைத்துலக தலைமைத்துவ முன்னுதாரணம், ஆற்றல் காரணங்களுக்காக இந்த விருது வழங்கப்பட்டது.

நவம்பர் 24ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் உள்ள எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற டான்ஸ் ஆஃப் டிஸ்ட்ரிக்ட் சீசன் 12 நிகழ்ச்சியில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

#TamilSchoolmychoice

வட்டார ஒத்துழைப்பை வளர்த்தல், ஒற்றுமையை ஊக்குவித்தல், எல்லைகளைத் தாண்டி ஆதரவற்றோரை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றில் டாக்டர் சரவணனின் முன்மாதிரியான தலைமைத்துவத்திற்காகவும், அரசியல், ஆன்மிகம் மற்றும் இலக்கியம் போன்ற துறைகளில் பன்முக ஆளுமைக்காகவும் இந்த விருதுக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என வடசென்னை ரோட்டரி சங்கம் அறிவித்தது.

கடந்த காலங்களில் வடசென்னை ரோட்டரி சங்கம் மேற்கொண்ட நற்பணிகளில் தனது பங்களிப்பை வழங்கிய சரவணனுக்கு நன்றி கூறும் விதத்திலும் இந்த விருது வழங்கப்படுவதாக வடசென்னை ரோட்டரி சங்கம் தெரிவித்தது.