சென்னை, ஜனவரி 6 – தான் சொந்தமாக தயாரித்து இயக்கியுள்ள விஸ்வரூபம் படத்தை டீ.டி.எச். தொழில்நுட்பத்தில் வெளியிடுவது தொடர்பாக தமக்கு மிரட்டல் வருகிறது என சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் நடிகர் கமல்ஹாசன் ஞாயிற்றுக்கிழமை புகார் அளித்தார்.
நடிகர் கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள “விஸ்வரூபம்’ திரைப்படம் வரும் 10-ம் தேதி வெளியிடப்படுகிறது. இப்படத்தை முதல்முறையாக டீ.டி.எச். தொழில்நுட்பம் மூலம் டி.வி. சேனல்களில் வெளியிட அவர் முடிவு செய்துள்ளார்.
இந்தப் புதிய முடிவுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் படத்தை டீ.டி.எச்.-ல் வெளியிடுவதில் கமல்ஹாசன் உறுதியாக உள்ளார்.
வரும் ஜனவரி 10-ம் தேதி இரவு டீ.டி.எச்.சிலும், ஜனவரி 11-ம் தேதி தியேட்டர்களிலும் வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் படம் டீ.டி.எச்சில் வெளியிடுவது தொடர்பாக மிரட்டல் வருவதாக சென்னையில் உள்ள காவல்துறை இயக்குநர் (டி.ஜி.பி.) அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை அவர் புகார் மனு அளித்தார்.
டி.ஜி.பி. அலுவலகத்தில் மனு அளித்த பின்னர், செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் கூறியதாவது: “நான் நேர்மையாக தொழில் செய்ய விரும்புகிறேன். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். படம் திட்டமிட்டபடி டீ.டி.எச்.சில் வெளியாகும். பின்னர் தியேட்டர்களில் வெளியாகும். டீ.டி.எச்.சில் விஸ்வரூபம் வெளியாகும்போது அதனை திருட்டுத்தனமாக படம் பிடித்து வெளியிடுவோம் என்று சிலர் மிரட்டல் விடுக்கிறார்கள். மேலும் படம் ஒளிபரப்பாகும்போது மின் விநியோகத்தை நிறுத்தி விடுவோம் என்றும் மிரட்டல்கள் வருகின்றன. மிரட்டல் விடுத்தவர்களின் பெயர்களையும் மனுவில் குறிப்பிட்டுள்ளேன். படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் மனுவில் கோரியுள்ளேன்” என்று கமல் தெரிவித்தார்.
பின்னர் தமிழக தலைமைச் செயலகம் சென்ற கமல்ஹாசன், தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் மற்றும் உள்துறை செயலாளர் ஆகியோரிடமும் இது தொடர்பான மனுவை அளித்தார்.