மும்பை – புற்று நோயால் அவதிப்பட்டு வந்த பிரபல பாலிவுட் பாடகரும் இசையமைப்பாளருமான ஆதேஷ் ஸ்ரீவஸ்த்வா நேற்று நள்ளிரவு காலமானார். அவருக்கு வயது 51.
இவர் 1966 செப்டம்பர் 4-ஆம் தேதி ஜபல்பூரில் பிறந்தவர்.
சல்தி சல்தி, கபி குசி கபி காம் போன்ற பாடல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனியிடத்தைப் பிடித்தவர்.
இந்தித் திரையுலகில் 90-களில் பாடகராக அறிமுகமான ஆதேஷ் ஸ்ரீவத்சவா, நூற்றுக்கும் மேற்பட்ட இந்தித் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
2010-ம் ஆண்டுதான் இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து உடனடியாகக் ‘கீமோதெரபி’ சிகிச்சை அளிக்கப்பட்டது.
5 ஆண்டுகளுக்கும் மேலாகக் கீமோ தெரபி சிகிச்சை மேற்கொண்டு வந்த போதும், கடந்த 40 நாட்களுக்கு முன்னர் புற்றுநோயின் தாக்கம் தீவிரமானது. இதையடுத்து அவர் மும்பையின் அந்தேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், இம்முறை ‘கீமோதெரபி’ சிகிச்சை கை கொடுக்காமல் நேற்று நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.
அவரது மரணம் பாலிவுட் ரசிகர்களையும் திரையுலகினரையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பாலிவுட் நட்சத்திரங்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று மறைந்த ஆதேஷின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பாலிவுட் பின்னணிப் பாடகி ஸ்ரேயா கோஷல், இயக்குநர் அபினவ் சின்ஹா ஆகியோர் டுவிட்டர் பக்கங்களில் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
அதேஷ் ஸ்ரீவஸ்தவாவுக்கு நேற்று பிறந்த நாளும் கூட! தனது பிறந்த நாளன்றே அவர் இறந்து போனதை எண்ணிக் குடும்பத்தார் கதறுகின்றனர்.