புதுடெல்லி- இந்திய அதிபர் பிரணாப் முகர்ஜி பயணம் மேற்கொண்ட விமானம், ஓடுபாதையில் சென்றபோது திடீரென ஒரு பன்றிக்கூட்டம் புகுந்த சம்பவம் நாக்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிபரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக நிகழ்ந்துள்ள இச்சம்பவம் குறித்து இந்திய விமான போக்குவரத்து துறை இயக்குநரகம் (டி.ஜி.சி.ஏ.) விசாரணையை தொடங்கியுள்ளது.
கடந்த 13ஆம் தேதி நாக்பூர் நகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் அதிபர் பிரணாப். அப்போது அவர் பயணம் செய்த விமானம் டெல்லியில் இருந்து புறப்பட்டு, நாக்பூரில் பத்திரமாகத் தரையிறங்கியது.
இதையடுத்து விமானங்கள் இறுதியாக நிறுத்தப்படும் பகுதியை நோக்கி அதிபர் பயணித்த விமானம் சென்று கொண்டிருந்தபோது, ஓடுபாதையில் திடீரென 8 பன்றிகள் கூட்டமாக குறுக்கிட்டன.
இதைக் கண்ட விமானி, அவற்றின் மீது மோதிவிடாமல் விமானத்தை கவனமாக இயக்கி, அதைப் பத்திரமாக உரிய இடத்தில் கொண்டு சேர்த்தார்.
அதிபர் பயணிக்கும் விமானங்கள், எந்தவொரு விமான நிலையத்தில் தரையிறங்கும் போதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உச்ச நிலையில் இருக்கும். இத்தகைய அதிஉயர் பாதுகாப்பு வளையத்தையும் மீறி பன்றிக்கூட்டம் எவ்வாறு விமான ஓடுபாதையில் நுழைந்தது என்பது தெரியவில்லை.
இதையடுத்து போக்குவரத்து துறை இயக்குநரகம் தனது விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.
இதற்கிடையே, மழை காரணமாகவே பன்றிகள் கூட்டம் ஓடுபாதையில் புகுந்துவிட்டதாக சிவில் விமானப் போக்குவரத்துறை அமைச்சர் அஷோக் கஜபதி ராஜூ விளக்கமளித்துள்ளார்.
அதேசமயம் இது போன்ற சம்பவம் இனி நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பாதுகாப்பு அம்சத்தில் கவனக்குறைவு இருக்கக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.