Home வணிகம்/தொழில் நுட்பம் இரண்டரை நிமிடத்தில் விமானச் சீட்டுகள் விற்றுத் தீர்ந்தன! எங்கு? எதற்கு?

இரண்டரை நிமிடத்தில் விமானச் சீட்டுகள் விற்றுத் தீர்ந்தன! எங்கு? எதற்கு?

623
0
SHARE
Ad
சிட்னி : உலகம் எங்கும் கொவிட்-19 பாதிப்புகளால் விமானப் பயணங்கள் முடக்கப்பட்டிருக்கின்றன. இருந்தாலும் ஒரு விமானப் பயணத்திற்கான பயணச் சீட்டுகள் இரண்டரை நிமிடங்களுக்குள்ளாக விற்றுத் தீர்ந்திருக்கின்றன.
எந்த நாட்டில், எந்தப் பயணத்திற்கு என்பது தெரியுமா?
ஆஸ்திரேலியாவில் இது நடந்திருக்கிறது. அந்நாட்டின் குவாந்தாஸ் (Qantas) விமான நிறுவனம் இந்த சாதனையைப் புரிந்திருக்கிறது.
கடந்த சில மாதங்களாக எங்குமே விமானப் பயணம் செல்ல முடியாமல் நொந்துபோய் இருக்கும் ஆர்வமுள்ள விமானப் பயணிகளைக் கவர்வதற்காக “எங்கும் செல்லா விமானப்பயணம்” என்ற புதுமையானத் திட்டத்தை அறிவித்தது குவாந்தாஸ்.
அதாவது மே மாத இறுதியில் முழு நிலா தெரியும் நாளில் அதனை இரசிக்கும் வண்ணமும், அப்போது நிகழவிருக்கும் சந்திர கிரகணத்தை கண்டு மகிழவும் சுமார் 40 ஆயிரம் அடிகள் உயரத்தில் விமானப் பயணம் மேற்கொள்ளப்படும் என அறிவித்தது குவாந்தாஸ்.
ஆனால், விமானம் எந்த இடத்திலும் நிற்காது மீண்டும் புறப்பட்ட விமான நிலையத்துக்கே பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிவிடும். இதுதான் பயணத் திட்டம்.
இந்த விமானப் பயணத்துக்கு ஆர்வம் கொண்டுதான் பயணிகள் விறுவிறுவென இதற்கான பயணச் சீட்டுகளை வாங்கித் தீர்த்து விட்டார்கள்.

இகோனோமி பிரிவு எனப்படும் சாதாரண பயணச் சீட்டுகளுக்கான விலை 386 அமெரிக்க டாலரில் தொடங்கியது. பிசினஸ் கிளாஸ் எனப்படும் வணிகப் பிரிவு பயணச் சீட்டுகளின் விலை 1,160 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.

அனைத்து பயணச் சீட்டுகளும் சரியாக இரண்டரை நிமிடங்களுக்குள் விற்று முடிந்தன.

இந்த விற்பனை வெற்றியைத் தொடர்ந்து மற்ற விமான நிறுவனங்களும் இதுபோன்ற பயணங்களுக்கான ஏற்பாடுகளைச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.