புத்ரா ஜெயா – இன்று நடைபெறும் சிவப்புப் பேரணியில் பங்கேற்பவர்கள் இன எதிர்ப்பு முழக்கங்களைச் செய்தால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உள்துறை அமைச்சரும், துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ டாக்டர் சாஹிட் ஹாமிடி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர்கள் இன எதிர்ப்புகளைக் குறிக்கும் வாசகங்களைக் கொண்ட சுவரொட்டிகளையும், பதாகைகளையும் கொண்டு வரக் கூடாது – தேசநிந்தனைச் சட்டத்தின் கீழ் எத்தகைய குற்றங்களையும் இழைக்கக் கூடாது என்றும் சாஹிட் கூறினார்.
ஐந்து இடங்களில் இருந்து கோலாலம்பூரின் பாடாங் மெர்போக் நோக்கி வரும் சிவப்புப் பேரணியினருக்கு காவல் துறையினரின் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாகவும், மீறிக் கொண்டுவரப்படும் இன எதிர்ப்பு பதாகைகளைக் காவல் துறை பறிமுதல் செய்யும் என்றும் சாஹிட் கூறினார்.
பெர்சே பேரணியினருக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் போன்றே சிவப்புப் பேரணியினருக்கு எதிராகவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சாஹிட் விளக்கியுள்ளார்.
பேரணியை, பெசாகா எனப்படும் தேசிய சீலாட் கூட்டமைப்பு ஏற்பாடு செய்ய முன் அனுமதியைப் பெற்றிருந்தாலும் காவல்துறை அணுக்கமாகக் கண்காணித்து வரும் என்றும் கலந்து கொள்பவர்களின் பின்னணியையும் ஆராய்ந்து வரும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
சிவப்புப் பேரணி அம்னோ ஆதரவில் நடைபெறுவது அல்ல, மாறாக முழுக்க முழுக்க அரசு சாரா தனியார் இயக்கங்களின் ஏற்பாட்டில் நடைபெறுகின்றது என்றும் மீண்டும் அவர் வலியுறுத்தினார்.