புதுடில்லி – டில்லியில் டெங்குக் காய்ச்சலால் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கிறார்கள்.
டில்லியில் டெங்குக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. ஒரு வாரத்தில் மட்டும் 600க்கும் மேற்பட்டவர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுப் பலரும் தொடர்ந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதால் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது.ஆகையால், ஒரு படுக்கையில் 4 பேர் தங்கி சிகிச்சை பெறும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
கடந்த வாரம் டெங்கு நோய் பாதிப்பால் சிகிச்சை பலனின்றி 7 வயதுச் சிறுவன் ஒருவன்உயிரிழந்தான். அவனது இழப்பைத் தாங்க முடியாமல் சிறுவனின் பெற்றோர் தங்கள் வீட்டு மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்ட பரிதாபச் சம்பவமும் நடந்துள்ளது.
இந்நிலையில், டெங்குக் காய்ச்சலால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
இதைத் தொடர்ந்து,தீவிரமாகப் பரவி வரும் டெங்குக் காய்ச்சலைத் தடுக்க அரசு போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என டில்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, டெங்குக் காய்ச்சலைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று அரசுக்குக் கேள்வி எழுப்பியதுடன் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் அது குறித்து அறிக்கையை வரும் 24-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் மத்திய அரசு மற்றும் டில்லி அரசிற்கு டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது