டமாஸ்கஸ் – சிரியாவில் சிரியா ராணுவத்திற்கும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்து வரும் உள்நாட்டுப் போரால் பல லட்சம் பேர் அந்த நாட்டை விட்டு வெளியேறி, ஐரோப்பாவில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
இதனால் ஐரோப்பிய நாடுகள் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகி வருகின்றன.இந்நிலைக்குத் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய அந்நாட்டு அதிபரே காரணமாவார் என்றும், இதற்குப் பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் என்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இதுதொடர்பாக அதிபர் பசார் அல் ஆசாத் ரஷ்ய பத்திரிக்கை ஒன்றில் கூறியுள்ளதாவது:
“”ஐரோப்பிய நாடுகள் சிரிய அகதிகளைக் கண்டுகொள்ளவில்லை என்பது இப்போது பிரச்சினை அல்ல. உண்மையில் இன்று சிரியாவில் நடக்கும் பிரச்சினைகளுக்கும் ஐஎஸ் தீவிரவாதிகள் இந்த அளவிற்கு வளர்ந்ததற்கும் அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் தான் முக்கியக் காரணம். அவை தீவிரவாத அமைப்பை அழிக்கவும் வளர்வதைத் தடுக்கவும் ஒரு முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
சிரியாவை விட்டு மக்கள் வெளியேறி வருவதற்கு அரசு காரணம் அல்ல; தீவிரவாதிகள் தான் காரணம்.தீவிரவாதிகளை அழிக்க ரஷ்யா, ஈரான் நாடுகள் எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அதேபோல மற்ற நாடுகளும் எங்களை ஆதரிக்க முன்வரவேண்டும்.
அமெரிக்காவிற்காக நான் பதவி விலக மாட்டேன். தேர்தலில் மக்கள் வாக்களித்து என்னை அதிபராகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.அவர்கள் நினைத்தால் மட்டுமே என்னைப் பதவி விலகச் செய்ய முடியும்” எனக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, “சிரியாவின் போக்கு குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா கவலை அடைந்துள்ளார். சிரியாவின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வு வேண்டும் என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடு” எனத் தெரிவித்துள்ளார்.