கோலாலம்பூர் – “தன்னார்வ மலேசியா”, மலேசியாவின் மிகப் பெரிய தன்னார்வ நிகழ்வு கடந்த செப்டம்பர் 12 -ம் தேதி நாடு தழுவிய நிலையில் மிகப் பிரமாண்டமாக நடந்தேறியது. நாட்டிலுள்ள 20,000 தன்னார்வலர்கள் கலந்து கொண்ட இந்த தொண்டூழிய நிகழ்வில், ஐஎம்4யு (iM4U) வின் 34 வெளித்தொடர்பு மையங்களும் இந்த வருடம் கலந்து சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
2014- ல் iM4U அறிமுகப்படுத்திய ‘தன்னார்வ மலேசியா’ (Volunteer Malaysia) என்ற நிகழ்வு, மலேசியர்கள் தன்னார்வ முறையில் இது போன்ற தொண்டூழிய நிகழ்வுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் எனும் நோக்கில் துவங்கப்பட்டது. இதனால் சமுதாயத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்பதே தலையாய நோக்கம்.
“மலேசியர்கள் தன்னார்வ தொண்டூழிய நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டும் எனும் நோக்கில் நாங்கள் தொடங்கிய பல நிகழ்வுகளில் ஒன்றுதான் ‘தன்னார்வ மலேசியா’.இதன்வழி அக்கறை மற்றும் பொறுப்புமிகுந்த ஒரு சமூதாயத்தை உருவாக்குவதே எங்கள் நோக்கம்” என்று கூறினார் iM4U-வின் தலைமை இயக்க அதிகாரி ரூடி மாலிக்.
கடந்த ஆண்டு 26, 835 தன்னார்வலர்கள் மரங்கள் நடவு ,பொது இடங்கள் சீரமைப்பு, கடற்கரையைச் சுத்தம் செய்தல் மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகளைச் சேகரித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு, 2014-ன் மிகவும் வெற்றிகரமான தொண்டு நடவடிக்கை எனும் சாதனையைப் படைத்தனர்.
இந்த ஆண்டு “தன்னார்வ மலேசியா”வின் சிறப்பம்சமாக iM4U-வின் சர்வதேச வெளித்தொடர்பு மையங்களின் மூலம் தோக்கியோ, நியூயார்க், மான்செஸ்டர், ஜகார்த்தா மற்றும் மெல்போர்னில் இருக்கும் தன்னார்வலர்களின் பங்கும் உள்ளது.
iM4U தலைமை இயக்க அதிகாரி ரூடி மேலும் கூறுகையில், “உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள நமது சக மலேசியர்களின் கவனத்தை “தன்னார்வ மலேசியா” ஈர்த்துள்ளதை எண்ணி நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். அனைவரும் ஒரு நல்ல பாதையில் தங்கள் ஆதரவையும், ஊக்கத்தையும் காட்ட ஒன்றாக திரண்டுவந்துள்ளது உண்மையான தொண்டூழியத்தைக் காட்டுகிறது”, என்றார்.
“இந்த தருணத்தில் அனைத்து iM4U வெளித்தொடர்பு மையங்கள், கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு, நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சு மற்றும் உள்ளூர் அரசாங்கத்திற்கும் நன்றி சொல்ல கடமைப்படுள்ளோம்,” என்று மேலும் கூறினார்.
இந்த நாளில், பொது கலை இயக்கம், பசுமைக் குழு செயல்பாடுகள், டெங்கு எதிர்த்து போர் மற்றும் கடற்கரை & நீருக்கடியில் சுத்தம் செய்க எனும் நான்கு முக்கிய தூண்களுக்குக் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பொது கலை இயக்கம் என்பது பொது இடங்களைச் சீரமைக்க தன்னார்வலர்களைத் தூண்டும் ஒரு திட்டமாகும். பசுமைக் குழு நடவடிக்கைகள் ஆரோக்கியமான மற்றும் நிலையான சுற்றுச்சூழலை உருவாக்கும் திட்டங்களைக் கொண்டுள்ளது.
இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட டெங்கு எதிர்த்து போர் எனும் திட்டம், டெங்கு பற்றிய கல்வியைக் கொடுத்து, அதை எதிர்த்து போராட சமுதாயத்திற்கு உதவும் நோக்கில் துவங்கப்பட்டது.
கடற்கரை மற்றும் நீருக்கடியில் சுத்தம் செய்யும் திட்டமானது கடல் மற்றும் நீருக்கடியில் உள்ள குப்பைகளை நீக்கி, கடல் வாழ் உயிரினங்களைக் காப்பாற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தவல்லது.
ஃபிசா, டைலர், அசுரா சைனல், டிஎச்ஆர் அறிவிப்பாளர் ஆனந்தா ராஜாராம், ஃபயர்மேன், அமான், சாசி ஃபாலாக், யாஸ்மின் ஹனி மற்றும் ரோஷான் உள்ளிட்ட பல உள்ளூர் பிரபலங்கள் மலேசியாவின் பல்வேறு இடங்களில் “தன்னார்வ மலேசியா” நிகழ்வில் கலந்துகொண்டு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.
ஆனந்தா நீலாய் வாழ் பொது மக்களோடு இணைந்து தன் பங்கை ஆற்றியது இங்கே குறிப்பிடத்தக்கது. மலேசிய மக்கள் ஒன்றாகத் திரண்டு இது போன்ற தொண்டூழிய நிகழ்வில் ஈடுபடுவதைப் பார்க்கையில் மிகவும் பெருமையாக இருக்கிறது என்று பெருமிதம் கொண்டார்.
“தன்னார்வ மலேசியா” நிகழ்வுகள் குறித்து மேலும் அறிய www.im4u.my எனும் அகப்பக்கத்திற்குச் செல்லவும். அல்லது சிலாங்கூர் வாழ் மக்கள் iM4U வானொலி 107.9FM வழியாகக் கேட்கலாம்.
iM4U பற்றிய மேல் விவரங்களுக்கு:-
பேஸ்புக்: www.facebook.com/1M4YOUTH
யூடியூப்: www.youtube.com/user/1Malaysia4Youth ஆகிய இணைப்புகளை வலம் வரலாம்.