Home Featured கலையுலகம் ‘கனவுகள்’ – மலேசிய ஹிப்ஹாப் பாடல் ஓர் பார்வை!

‘கனவுகள்’ – மலேசிய ஹிப்ஹாப் பாடல் ஓர் பார்வை!

966
0
SHARE
Ad

11904535_1614354152166234_9136036768733976367_nகோலாலம்பூர் – உலக அளவில் ஹிப்ஹாப் இசையில் குறிப்பாக தமிழில் மலேசிய இசைத்துறை ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கிறது. அதனாலேயே மலேசியப் பாடல்களுக்கு இன்றைய இளைஞர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்து வருகின்றது.

அந்த வகையில், மலேசியாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் சுந்தரா, ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தனது டிரேட் மார்க் ஹிப்ஹாப் இசையில் உருவாக்கியிருக்கும் பாடல் தான் ‘கனவுகள்’.

இளம் ஹிப்ஹாப் பாடகர்களான ஜோக்காஸ் குழுவினருடன் இணைந்து சுந்தரா உருவாக்கியுள்ள இந்தப் பாடல், இயக்குநர் ஜெய்கிஷன் இயக்கத்தில், விக்னேஷ்வரன் விஜயன் ஒளிப்பதில், சுமன் எடிட்டிங்கில் ஒரு இசைக் காணொளியாகப் பதிவு செய்யப்பட்டு அண்மையில் யூடியூபில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

#TamilSchoolmychoice

‘கனவுகள்’  ஓர் பார்வை இதோ…

“கனவுகள் யாவும் கரைந்தது உன்னாலே நெஞ்சை காயம் செய்தாய்” பாடலை மட்டும் தனித்துக் கேட்டாலே, தொடக்க வரிகள் உணர்த்தி விடுகிறது, இது காதலின் வலியை கூறப்போகிறது என்று. சரி காதல் வலி ஆணுக்கா? பெண்ணுக்கா? வேறு யார் ஆணுக்கு தான் என்று நீங்கள் நினைத்தால், உங்கள் நினைப்பு தவறாகி விடும்.

திரைப்படங்களிலும் சரி, ஆல்பம் பாடல்களிலும் சரி, காதல் தோல்வி என்றாலே ஆண்களுக்கானதாகத் தான் இருக்கும் என்ற மரபை ‘கனவுகள்’ உடைத்து இருக்கிறது. வேறு ஒருத்திக்காக தன்னை விட்டுச் செல்லும் காதலனை நினைத்து கதாநாயகி பாடும் படியாக இந்த பாடல் அமைந்துள்ளது.

காதாநாயகிக்கு காதல் தோல்வி என்பதே புதுமை தான், அதிலும் விட்டுச் சென்ற காதலனை ஒருவார்த்தை கூட தவறாகச் சொல்லாமல், காதல் வலியை உணர்த்தி இருப்பது மற்றொரு புதுமை. அதேபோல், இந்த பாடலை காட்சிப் படுத்தி இருக்கும் விதமும் காதலையும், காதல் வலியையும் ஒவ்வொரு காட்சிகளிலும் உணர்த்தி இருப்பதும் அருமை. குறிப்பாக கதாநாயகியின் முகபாவங்களில் அத்தனை துடிப்பு.

சிறப்பாக இருக்கும் சுந்தராவின் இசைக்கு உண்மையில் உயிர் கொடுத்து இருப்பது ஷிரின் பாலனின் பரவசப்படுத்தும் குரலும், ஜோக்காஸ் இசைக்குழுவினரின் ஹிப்பாப்பும் தான்.

ஷிரின், கதாநாயகியின் காதல் வலியை உணர்த்தினால், ஜோக்காஸ் குழுவினர் காதல் தோல்வியில் மீள்வதை தங்கள் பாணியில் உணர்த்துகின்றனர்.

“உயிர் வலி கொடுக்கிறாய்..இதயத்தை வதைக்கிறாய்” போன்ற இடங்களிலெல்லாம், இதயத்தின் ஓரம் ஒரு வலி ஏற்படத்தான் செய்கிறது. அடுத்தடுத்த பாடல்கள் பாடினாலும் ‘கனவுகள்’ பாடல், ஷிரின் மற்றும் ஜோக்காஸ் குழுவினரின் இசைப்பயணத்தில் முக்கிய இடத்தைப் பிடிக்கும்.

அதேவேளையில், “உலகமே அன்பால் ஆனதே அதை நீயும் தேடி ஓடாதே..உண்மையில் அன்பு என்றாலே கொடுப்பது தான்..” போன்ற உலக நியதிகளை சொல்லும் அர்த்தமுள்ள வரிகளையும் ஒரே சேரக் கொடுத்திருக்கும் ‘கனவுகள்’ குழுவினரின் கனவுகள் நிச்சயமாக இந்தப் பாடலின் மூலம் மெய்ப்பட்டிருக்கிறது.

சுகமான இசை, உயிரோட்டமான வரிகள், அற்புதமான காட்சியமைப்பு என ஒரு சிறப்பான கலவையாக உருவாகி இருக்கும் ‘கனவுகள்’ தனிப்பாடல் கேட்போரை இசையின் மடியில் துயில் கொள்ள வைக்கும் என்பதில் சந்தேகமில்லை..

– சுரேஷ்

கனவுகள் முழுப் பாடலையும் இங்கே காணலாம்:-