Home Featured நாடு அரசாங்கத்தைக் கவிழ்க்கும் வேலையில் ஈடுபட்டார் என கைருடின் அபு ஹாசான் கைது!

அரசாங்கத்தைக் கவிழ்க்கும் வேலையில் ஈடுபட்டார் என கைருடின் அபு ஹாசான் கைது!

861
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அம்னோவில் பிரதமர் நஜிப்புக்கு எதிராக எதிர்ப்பு பரவலாக வெடித்துக் கிளம்பவில்லை என்றாலும், ஆங்காங்கு சில தலைவர்கள் தங்களின் கடுமையான எதிர்ப்புகளைப் பதிவு செய்து வந்திருக்கின்றார்கள்.

அம்னோவின் மகளிர் பகுதியைச் சேர்ந்த அனினி சாடுடின் நஜிப்புக்கு எதிராக வழக்கு தொடுத்திருக்கும் நிலையில், பல மாதங்களுக்கு முன்பே நஜிப்புக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, காவல் துறையில் புகார்களும் செய்து, சில விவகாரங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தவர் அம்னோ பத்து கவான் தொகுதியின் முன்னாள் துணைத் தலைவர் கைருடின் அபு ஹாசான்.

அதன் காரணமாக அவர் அம்னோவிலிருந்து நீக்கப்பட்டார்.

#TamilSchoolmychoice

Khairuddin Ex UMNO Batu Kawanநேற்று கைருடின் (படம்) புக்கிட் அமான் காவல் துறையினரால் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது டாங் வாங்கி காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைருடின், மலேசியக் குற்றவியல் சட்டம் 124C பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறார் என அவரது வழக்கறிஞர் மாத்தியாஸ் சாங் கூறியதாக மலேசியகினி செய்தித் தளம் தெரிவித்துள்ளது.

நேற்று மோண்ட் கியாராவில் உள்ள அவரது இல்லத்தில் இரவு 7.30 கைது செய்யப்பட்ட கைருடின், இன்று காலை நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்படுவார் என்றும் அவர் மீதான தடுப்புக் காவலை நீட்டிக்க காவல் துறையினர் விண்ணப்பம் செய்வர் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

“ஒவ்வொரு சம்பவமும் ஒரு காரணத்திற்காகத்தான் நடைபெறுகின்றது. நீங்கள் கடவுள் மீது நம்பிக்கை வைத்தால், எல்லாம் நல்லபடியாகவே முடியும்” என கைருடினின் மனைவியும், நடிகையுமான உமி அய்டா மலேசியாகினியிடம் கூறியிருக்கின்றார்.

தானும், தனது வழக்கறிஞரும் வெளிநாட்டுக்கு செல்வதற்கு குடிநுழைவுத் துறையினரால் தடை விதிக்கப்பட்டிருப்பதாக, நேற்று, தனது பேஸ்புக் பதிவில் கைருடின் கைதுக்கு முன்பாக தெரிவித்திருந்தார்.

எதிர்வரும் திங்கட்கிழமை காலை 11.00 மணியளவில் புக்கிட் அமான் காவல்துறை தலைமையகத்திற்கு வரும்படி தான் அழைக்கப்பட்டிருப்பதாகவும் கைருடின் குறிப்பிட்டிருந்தார். எனினும் அதற்கு முன்பாகவே கைது செய்யப்பட்டிருக்கின்றார்.