சென்னை – தனது முகநூல் பக்கத்தை முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்து கவனித்து வருவது தனக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், தமிழக மக்களின் பிரச்சினைகள் பற்றித் தெரிந்துகொள்ள தனது முகநூல் பக்கம் அவருக்குப் பேருதவியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்குப் பதிலளித்துப் பேசும் போது, “திமுக சட்டப்பேரவைக் குழுத் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு நிலை குறித்துச் சில கருத்துகளை முகநூலில் பதிவு செய்துள்ளார். அவை உண்மையிலேயே அவரது கருத்துகள்தானா என்பதை அவர் விளக்க வேண்டியது அவசியம்.
கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியின்போது ஸ்டாலின் அவரது முகநூல் பதிவின் மூலம் வாழ்த்துத் தெரிவித்திருந்தார். ஆனால், திமுக தலைமை அதற்கு மறுப்பு தெரிவித்து, ஸ்டாலினின் இணையதளத்தைப் பராமரிக்கும் சிலர் இதை வெளியிட்டுள்ளனர் என்றும், இந்த வாழ்த்துச் செய்தி ஸ்டாலின் விருப்பப்படி ஆனதில்லை என்றும் விளக்கம் அளித்தது.
அதுபோல் தற்போது சட்டம் – ஒழுங்கு பற்றி ஸ்டாலினின் முகநூலில் வெளிவந்த பதிவுகளும் மற்றவர்களின் கருத்துதானோ என்னவோ?” என்று குறிப்பிட்டார்.
அதற்குப் பதில் அளிக்கும் விதமாகத் தமது முகநூல் பக்கத்தை முதலமைச்சர் தொடர்ந்து பார்த்து வருவது குறித்து மகிழ்ச்சி தெரிவிப்பதாக ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
அதில் உள்ள தகவல்களின் அடிப்படையில், முதலமைச்சர் ஜெயலலிதா மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, மக்களின் உணர்வுகளை, ஏமாற்றங்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழகச் சட்டம்-ஒழுங்கு குறித்துத் தாம் தெரிவித்திருக்கும் புள்ளி விவரங்கள் அனைத்தும் தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தால் வெளியிடப்பட்டவை என்றும் ஸ்டாலின் பதிலளித்திருக்கிறார்.