கேரளா- நடிகர் மம்முட்டி விளம்பரப் படத்தில் நடித்ததற்காக அவர்மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் விநோதமான வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது.
மம்முட்டி இந்துலேகா ஒயிட் சோப் விளம்பரத்தில் “இந்துலேகா சோப்பைப் பயன்படுத்தினால் வெள்ளை நிறத்துடன் பிரகாசமான அழகைப் பெறலாம்” என்று வசனம் பேசி நடித்துள்ளார்.
இந்த விளம்பரத்தைப் பார்த்த கேரளாவின் வயநாடு பகுதியைச் சேர்ந்த சிற்பி கே சத்து என்பவர், நடிகர் மம்மூட்டி மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாக அந்தச் சோப்பை வாங்கி ஏறக்குறைய ஒரு வருடத்திற்கும் மேலாகப் பயன்படுத்தியுள்ளார்
ஆனால், மம்மூட்டி கூறியது போல் வெள்ளை நிறத்துடன் பிரகாசமான அழகைப் பெற முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டுள்ளதாக நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அவரது மனுவை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், நடிகர் மம்முட்டிக்கும் இந்துலேகா சோப் நிறுவனத்துக்கும் விசாரணைக்கு நேரில் வருமாறு சம்மன் அனுப்ப உத்தரவிட்டது.
இதனையடுத்து, மம்மூட்டி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நடிகர் மம்முட்டி நேரில் ஆஜராகக் கூடுதல் அவகாசம் வேண்டும் என்றார்.இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இந்த மனு மீதான விசராணையை அக்டோபர் 12-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
இதுகுறித்துச் சிற்பி சத்து, “நான் ஒரு வருடமாக இந்தச் சோப்பைப் போட்டுக் குளித்து வருகிறேன். ஆனால் மம்முட்டி சொன்னபோது போல எனது நிறம் மாறவில்லை.
இப்படிப்பட்ட சோப்புக்கு மம்முட்டி போன்ற பெரிய நடிகர்கள் விளம்பரம் தருவது அநியாயமாக உள்ளது. இது தவறான விளம்பரம். இதற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்” என்று கோபமாகக் கூறியுள்ளார்.
ஏற்கனவே இதுபோன்ற அழகு சாதனத் தயாரிப்பு விளம்பரங்களில் நடித்து ஷாருக் கான், சோனம் கபூர், ஐஸ்வர்யா ராய், காத்ரீனா கைப், சோனம் கபூர் போன்றோர் வழக்கு விவகாரங்களில் சிக்கியது நினைவிருக்கலாம்.அந்த வரிசையில் தற்போது மம்முட்டியும் இணைந்துவிட்டார்.