நியூயார்க் – தனது அயர்லாந்து வருகையை முடித்துக் கொண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க வருகையின் ஒரு பகுதியாக நியூயார்க் சென்று சேர்ந்துள்ளார்.
அடுத்த சில நாட்களுக்கு அமெரிக்காவில் அவருக்காக பல நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்க அதிபல் பராக் ஒபாமாவையும் அவர் சந்திப்பார்.
சிலிக்கோன் தொழில்நுட்ப மையத்துக்கு மோடி வருகை
இந்த முறை மோடி தனது அமெரிக்க வருகையின்போது சான் பிரான்சிஸ்கோ செல்கின்றார். அங்கு சிலிக்கோன் வேல்லி (Silicon Valley) எனப்படும் கணினி மற்றுத் தொலைத் தொடர்பு தொழில் நுட்ப மையங்களுக்கு வருகை தருகின்றார். இந்தப் பகுதிக்கு பல்லாண்டுகளுக்குப் பின்னர் அதிகாரபூர்வமாக வருகை தரும் முதல் இந்தியப் பிரதமர் மோடி ஆவார்.
பேஸ்புக் எனப்படும் முகநூல் நிறுவனத்தின் தலைமையகத்திற்கு வருகை தரும் மோடி அங்கு கலந்துரையாடல் ஒன்றில் பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்குடன் கலந்து கொள்வார்.
கூகுள், மற்றும் டெஸ்லா நிறுவனங்களுக்கும் வருகை தரும் மோடி, அங்கு வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் இந்திய தொழில் நுட்ப நிறுவனங்களின் தலைமைச் செயலாளர்களுடன் சந்திப்புக்கள், விருந்துகளில் கலந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
சிலிக்கோன் பள்ளத்தாக்கில் இயங்கிக் கொண்டிருக்கும் பல அனைத்துலக நிறுவனங்களின் தலைவர்கள், தலைமைச் செயல் அதிகாரிகளுடன் மோடி சந்திப்புக்கள் நடத்துவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தனது ‘மேக் இன் இந்தியா’ – “இந்தியாவில் தயாரியுங்கள்” என்ற திட்டத்தை மேலும் முன்னெடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாக மோடியின் அமெரிக்கப் பயணம் அமையும் என்றும் கருதப்படுகின்றது.
படம்: அயர்லாந்து தலைநகர் டப்ளிளின் உள்ள இந்திய வம்சாவளியினரிடையே நேற்று உரையாற்றிய – நரேந்திர மோடி (டுவிட்டர் படம்)