Home Featured கலையுலகம் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதிற்குப் போட்டியிட ‘கோர்ட்’ மராத்திப் படம் தேர்வு!

இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதிற்குப் போட்டியிட ‘கோர்ட்’ மராத்திப் படம் தேர்வு!

540
0
SHARE
Ad

24-1443087092-marathi-film-court-102-60மும்பை – சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருது பெற்ற மராத்திய மொழிப் படமான ‘கோர்ட்’  இந்தியாவின் சார்பில் ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடத் தேர்வாகியுள்ளது.

ஹாலிவுட்டின் மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி அடுத்த ஆண்டு நடைபெறுகிறது.

ஆஸ்கர் விருதின் அந்நிய மொழித் திரைப்படப் பிரிவில், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சிறந்த திரைப்படங்களும் போட்டியிடும். அந்த வகையில் இந்தியாவின் சார்பில் ஆஸ்கர் விருதிற்குப் போட்டியிட, மாரட்டிய மொழித்திரைப்படமான ‘கோர்ட்’ தேர்வாகியுள்ளது.

#TamilSchoolmychoice

மூத்த நடிகரும், இயக்குநருமான அமோல் பலேகர் தலைமையில், 16 பேர் கொண்டு நடுவர் குழு  ‘கோர்ட்’ படத்தைத் தேர்ந்தெடுத்துள்ளது.

இந்தியா சார்பில் பாகுபலி, காக்கா முட்டை, மேரி கோம், மாசான், பீ.கே, குற்றம் கடிதல் என 30 படங்கள் போட்டியில் இருந்தன. ஆனால் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்ற படங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி, சாதாரண மராட்டியப் படமான ‘கோர்ட்’ படம் ஆஸ்கார் விருதுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தலைப்புக்கு ஏற்ற படி கதை ஒரு நீதிமன்றத்தின் உள்ளே நடைபெறுகிறது. மக்கள் விரோத அரசுக்கு எதிராகத் தன்னுடைய பாடல்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் மக்கள் பாடகர் நாராயண் காம்ப்ளே.

அவர் தன் பாடல்கள் மூலம் மும்பையில் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் பவார் என்பவரைத் தற்கொலைக்குத் தூண்டியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுகிறார். அவரை மீட்க மனித உரிமைப் போராளியான வழக்கறிஞர் ஒருவர் போராடுகிறார்.

எந்தவிதப் பெரிய நடிகர்களும் இல்லாமல் வெறும் கதையின் பலத்திலேயே பயணம் செய்கிறது ‘கோர்ட்’ திரைப்படம். முக்கால்வாசி படம் கோர்ட்டுக்கு உள்ளே நடை பெற்றாலும் எந்த இடத்திலும் அலுக்காமல், எதார்த்தத்தை மட்டுமே வெளி கொண்டு வருகிறது.

கோர்ட் படத்தை இயக்கி இருப்பது சைதன்யா தம்கனே என்கிற ஓர் அறிமுக இயக்குநர் என்பது கூடுதல் சிறப்பு.

அர்ஜெண்டினாவின் புவனஸ் அயர்ஸ் நகரில் நடந்த 17-ஆவது அனைத்துலகத் திரைப்பட விழாவில் இப்படத்தில் முதன்மையான கதாபாத்திரத்தை ஏற்று நடித்த விவேக் கோம்பருக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது.

மேலும், இப்படம் வியன்னா, சிங்கப்பூர், வெனிஸ் திரைப்பட விழாக்களில் விருதுகளைக் குவித்தது மட்டுமல்லாமல், சிறந்த திரைப்படம் எனத் தேசிய விருதும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படம் ஆஸ்கர் விருதையும் வெல்லுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.